பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 39


ஆனாலும் ஒருசிலர் வெற்றிபெற்ற சூழ்நிலையில், போதைக்கும், மமதைக்கும் ஆளாகிவிடாமல், பெற்ற முயற்சிப்பர்; துணிந்து புதிய முயற்சிகளில் அடி எடுத்து வைப்பர். இவர்கள் வெற்றி மேல் வெற்றியும் பெறுவர். இக்கருத்தை வல்லிக்கண்ணன் தமது கதை மூலம் கூறுவதைக் கேளுங்கள்.

“வாழ்க்கைப் பாதையில் துணிந்து அடி எடுத்து வைத்து வெற்றி கண்டவனே அடுத்து அடுத்து வெற்றிகளைச் சந்திக்க முடிகிறது. முதல் வெற்றி மேலும் பல வெற்றிகளைக் கொண்டு சேர்க்கிறது. அதனாலேயே “வெற்றிபோல் எதுவும் வெற்றி பெறுவதில்லை” என்ற ஆங்கில வசனம் ஏற்பட்டுள்ளது.”

— (வாழ விரும்பியவன் — வல்லிக்கண்ணன் பக் 38)

மனித சமூகத்தில், புராணங்களில், இதிகாசங்களில் மகளிர்க்குத் தனி இடம் — உயர்ந்த இடம் உண்டு. மதங்களிலும் அப்படித்தான். ஆனால் நடைமுறையில் நாம் நம்முடைய சமூகத்தில் பெண்களை நடத்தும் முறை வெட்கித் தலைகுனிய வேண்டிய அளவிற்குள்ளது. நமது சமூகத்தில், மகளிர் விடுதலைக்கென்று முதற்குரல் கொடுத்தவன் பாரதி, அவனைத் தொடர்ந்து பாவேந்தனும் மகளிர் விடுதலைக்காகப் பாடுகிறான். நமது சமூகத்தில் மகளிர் நிலை, நேற்றைக்கு இன்று பரவாயில்லை. சற்றே மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும், மகளிர்க்கு இழைக்கும் கொடுமைகள் ஓய்ந்து விட்டன என்று சொல்ல முடியாது. மகளிர் விடுதலை குறித்துப் புதுமைப்பித்தன் ஆழமாகச் சிந்தித்தார்; மகளிர் நலத்திற்கென எழுதினார்.

புதுமைப்பித்தனின் ‘நினைவுப் பாதை’ என்ற, படைப்பில் வைரவன் பிள்ளை வருகிறார். அவருடைய