பக்கம்:பாரதித் தமிழ்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36. பாரதி தமிழ்

சுமார் நூறு பிரதிநிதிகளைக் கூட்டிக்கொண்டு வருவதாகத் திலகருக்குத் தந்தி கொடுத்தோம்.’

பாரதியார், வ.உ.சி. முதலியோர் மிகுந்த உற்சாகத்தோடு, சூரத் போய்ச் சேர்ந்தார்கள். 1907 டிசம்பர் 27-ஆம் தேதி தொடங்கிய காங்கிரஸ் மிதவாதிகளின் விருப்பம் போல நடைபெறவில்லை. ராஷ்பிகாரிகோஷைத் தலைவராகப் பிரேரேபணை செய்தது முதல் ஒரே குழப்பந்தான். அடுத்த நாள் வரை நடவடிக்கைகளைத் தள்ளி வைத்தார்கள். அடுத்த நாள் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. திலகர் தமக்குப் பேச உரிமை உண்டென்று தலைவர் அநுமதியை எதிர்பார்க்காமல் மேடைமீதேறினர். ஆரவாரம்,நாற்காலி வீசி, செருப்பு வீசி, தடியடி என்றிப்படிக் காங்கிரஸ் முடிந்தது.

குழப்பத்தில் முடிந்தாலும் சூரத் காங்கிரசால் நன்மை ஏற்படாமலில்லை. திலகர் கட்சியிலும், அவர் ள்கைகளிலும் பாரதியாருக்குப் பற்று மிகுந்தது. திலகரைப் போற்றியும், நிதானக் கட்சியாரை நையாண்டி செய்தும் பாரதியார் பாடல்கள் எழுதலானர்.

சென்னை திரும்பிய பிறகு அவர் இன்னும் தீவிரமாக இந்தியாவில் எழுதத் தொடங்கினர். “பாரதியாரின் இந்தியா பத்திரிகைச் சட்ட வரம்பை மீறி நெருப்பு மழை பொழியத் தொடங்கிற்று" என்று எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு குறிப்பிடுகிறார்.

அரசாங்கம் சும்மா இருக்குமா ? இந்தியாவின் மீது தனது கண் போடலாயிற்று. அப்பத்திரிகை வெளியாவதற்குக் காரணமானவர்களைக் கைது செய்ய உத்தரவும் பிறந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/36&oldid=1539909" இலிருந்து மீள்விக்கப்பட்டது