பக்கம்:பாரதித் தமிழ்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

பாரதி தமிழ்


நடத்துவதற்கு வேண்டிய பொருளும் இல்லாமல் புதுச்சேரியில் மறைந்து வாழ்கின்றபோது அவருடைய நிலைமை எவ்வாறிருந்திருக்கும்? ஆனால் இங்கே கோபத்தையும் படபடப்பையும் மட்டும் கூறி, விட்டுவிடுதல் சரியல்ல. பாரதியாரின் அன்பு வழிந்தோடும் நிலையையும் கூறவேண்டாமா? அது கவிஞருடைய அன்பு, சாதாரண உள்ளங்கள் எட்ட முடியாத உயரத்தை அது அடைந்திருக்குமல்லவா? அதன் பெருக்கையும் அவர் மனைவியாரும் மற்றவர்களும் அநுபவித்திருப்பார்களல்லவா? மேலும் பாரதி யார் பெண்களுக்கு உயர்ந்த ஸ்தானம் அளிக்க வேண்டுமென்ற கொள்கையுடையவர். ஜகத்திற்கு ஆதாரமாகிய பெருங்கடவுள் ஆண் பெண் என இரண்டு தலைகளுடன் விளங்குகிறது. இரண்டும் பரி பூர்ணமான சமானம். பெண்ணை அணுவளவு உயர்வாகக் கூறுதலும் பொருந்தும்’ என்பது அவர் வாக்கு. பெண்களைப்பற்றிய அவருடைய கட்டுரைகளிலும் கவிகளிலும் அவருடைய உள்ளம் தெரிகின்றது. அதன் லட்சியக் கனவை உணர்ந்து அது பவிக்கக்கூடிய வாய்ப்பும் அவருடைய மனைவியாருக்கு உண்டல்லவா?

நிவேதிதா தேவியார் பாரதியாருக்கு குருவாக அமைந்தார் என்று முன்பே கூறினேன். ஆன்மிகத் துறையிலே ஆர்வத்தைப் பெருக்க அரவிந்தரின் நட்பும் கிடைத்தது. மேலும் குள்ளச்சாமி, கோவிந்தஸ்வாமி, யாழ்ப்பாணத்துச் சுவாமி ஆகிய ஞானிகளின் தரிசனமும் உபதேசமும் தமக்குக் கிடைத்ததாகப் பாதி அறுபத்தாறு என்னும் நூலில் அவர் குறிப்பிடுகிரார். சித்தர்களின் வாக்குப் போல அந்நூல் அமைந்திருக்கிறது. குள்ளச்சாமியைப் பற்றிப் பாரதியார் சில கட்டுரைகளிலும் எழுதியிருக்கிறார், பராசக்தியினிடத்தே பாரதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/50&oldid=1539781" இலிருந்து மீள்விக்கப்பட்டது