பக்கம்:பாரதித் தமிழ்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

பாரதி தமிழ்


டிருந்த அவரை மறுபடியும் ஸ்தூல சரீரத்தில் பார்க்கப் போகிறதில்லை என்று நாம் நினைக்கவில்லை. திங்கட்கிழமையன்று மித்திரன் வேலைக்கு வந்துவிடுவதாகச் சில தினங்களுக்கு முன் சொல்லியனுப்பிய அவர் அத்திங்கட்கிழமையன்று சாம்பராகி விட்டது என்ன கொடுமை!........"


அதே நாளில் நகரச் செய்தி என்ற தலைப்பின் கீழ் இன்னும் சில விவரங்கள் எழுதப்பட்டுள்ளன : “ ஒரு வாரமாக ஸ்ரீ சுப்ரமணிய பாரதி தேக நோய் கொண்டு திருவல்லிக்கேணியில் அசெளக்கியமாய் இருந்து திடீரென்று நேற்று இரவு 1 மணிக்கு இம் மண்ணுலகைவிட்டு விண்ணுலகமடைந்தார். அவர் இறந்த செய்தி தெரிந்தவுடன் ஸ்ரீமான்களான புதுச்சேரி ஸ்ரீனிவாசாசாரியார், திருமலாசாரியார், ஹரிஹர சர்மா, சின்னசாமி, நெல்லையப்பர், நீல கண்டன் முதலான பலர் வந்தனர்...........ஹரிஹர சர்மா, கிருஷ்ணசாமி சர்மா, முதலானவர்கள் பிரேதத்தைத் தாங்கிக்கொண்டு சுடுகாடு சென்று அங்கு தகனத்துக்குச் சற்றுமுன்னர் ஸ்ரீமான் சர்க்கரை செட்டியார், கிருஷ்ணசாமி சர்மா, ராமசந்திர அய்யர் இவர்கள் தமிழிலே பேசிய பிறகு, சுரேந்திர நாத் ஆர்யா தெலுங்கில் பேசினர். பாரதியார் இயற்றிய கீதங்கள் பாடிய பிறகு தீ மூட்டப்பட்டது. பாரதியார் ஆவி நற்கதியடையும்படி எல்லோராலும் பிரார்த்திக்கப்பட்டது.”


தமது எழுத்து வன்மையினாலேயே நாட்டிலே விழிப்பையும் மொழியிலே மறுமலர்ச்சியையும் உண்டாக்கிய கவிஞர் தமது 39-வது வயதிலேயே மறைந்து விட்டார். அவருடைய உள்ளத்தினின்று பொங்கிய உணர்ச்சிக் கனலை அவருடைய உடம்பு அதற்குமேல் தாங்க முடியவில்லை. உடல் தாங்க முடியாததைத் தமிழ் தாங்கி நிற்கிறது. அதனால் புதிய உரம் பெற்று வளர்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/58&oldid=1539775" இலிருந்து மீள்விக்கப்பட்டது