பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

பாண்டியன் நெடுஞ்செழியன்

இப்போது நாம் பார்க்கப் புகுவது நாளங்காடி; காலைக் கடை. இங்கே வெவ்வேறு வகையான மக்கள் தங்கள் தங்கள் மொழியிலே பேசுகிற ஓசை ஒலிக்கிறது. முரசை அடித்து விழாவைச் சிலர் அறிவிக்கிறார்கள். பல வாத்தியங்களை வாசிக்கிறார்கள். இங்கே நாளங்காடி, அல்லங்காடி என்று இரண்டு வகைக் கடைத் தெருக்கள் இருக்கின்றன. சித்திரத்தைக் கண்டாற் போலத் தோன்றும் அமைப்புடையன அவை.

நாளங்காடியிற் பல பல கொடிகள் காட்சி அளிக்கின்றன. கோயில்களில் விழாக்கள் நடக்கின்றன. அதைப் புலப்படுத்தும் கொடிகள் பல. அரசனுடைய ஏவலால் படைத்தலைவர் அவ்வப்போது வேறு மன்னருடைய மதில்களைக் கைப்பற்றுவார்கள். அப்போதெல்லாம் வெற்றிக் கொடிகளை உயர்த்துவார்கள். அவ்வாறு உயர்த்திய கொடிகள் பல அசைகின்றன. போர்க்களத்தே பொருது பெற்ற வெற்றியைக் காட்டும் கொடிகள் பல. கள் விற்கும் இடம் இதுவென்று அடையாளம் காட்டும் கொடியும், கல்விச் சிறப்பினால் அறிஞர் உயர்த்திய கொடியும், தவம் கொடை ஆகிய சிறப்பைப் புலப்படுத்தும் கொடிகளுமாகப் பல பெரிய கொடிகள் அங்கங்கே அருவியைப்போல அசைகின்றன.

மதத்தால் சிறந்த யானைகளும், அன்னச் சேவலைப் போன்ற குதிரைகள் பூட்டிய தேரும், வேகமாக ஓடும் குதிரைகளும், மிடுக்குடைய வீரர்களும் அந்த வீதி வழியே செல்வது உண்டு. அப்போதெல்லாம் அங்கே பூந்தட்டிலே பூவை வைத்து விற்பவர்களும்,