பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

பாண்டியன் நெடுஞ்செழியன்

என்பவன். அவன் கொடையிலே சிறந்தவன்; புலவர்களைப் பாதுகாப்பவன்; நல்ல பண்புகளை உடையவன். ஆயினும், நிலத்தின் இயல்பு நீரை மாற்றுவதுபோல அவனுடைய அமைச்சர்களிற் சிலர் அவனுக்குத் தீய எண்ணத்தை உண்டாக்கினார்கள். மன்னனாகப் பிறந்தாலே மண்ணாசை பற்றிக்கொள்ளும். அமைச்சர்களுடைய தூண்டுதலும் சேர்ந்தால் அது பெருகித் தீயாக மூண்டுவிடும்.

மாந்தரஞ் சேரல் இரும்பொறையைச் சில அமைச்சர்கள் நெருங்கிப் பேசினார்கள். “பாண்டி நாட்டில் இப்போது ஒரு குழந்தை அரசாளுகிறது. பால்மணம் மாறாப் பாலகனை அரசனாகப் பெற்ற பாண்டிய மக்கள் எப்படித்தான் வாழப் போகிறார்களோ?” என்று பேச்சைத் தொடங்கினர்.

“இதுவரையில் வாழ்ந்தது போலத்தான் வாழ்வார்கள்” என்றான் சேரன்.

“அப்படிச் சொல்வதற்கில்லை. அரசன் திறமையுடையவனாக இராவிட்டால் ஆட்சி நன்றாக நடவாது. இளங்குழந்தைக்கு அரசியல் எப்படித் தெரியும்? உடனிருக்கும் அமைச்சரும் படைத்தலைவரும் தம்முடைய போக்கிலேதான் நாட்டை ஆள்வார்கள். ஒவ்வொரு வருக்கும் ஒவ்வோர் ஆசை இருக்கும். தன்னலம் பெருகிய உலகத்தில் ஒவ்வொருவனும் தனக்கு மிகுதியான ஊதியம் வரவேண்டும் என்று ஆசைப்படுவான். அவர்களுக்குள் மன வேறுபாடு நேரும்; ஒற்றுமை குலையும். ஆட்சி சிதைவுறும். இத்தகைய செவ்வியைக் கண்டு அருகில் உள்ள அரசர்கள் எளிதிலே நாட்டைக் கைப்பற்றிக் கொள்வார்கள்.”