பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6. புலவர் அறிவுரை

நெடுஞ்செழியன் தோள் தினவு இன்னும் தீரவில்லை. புதிய நாடுகளைப் பிடிக்கவேண்டும் என்ற ஆவல் மேலோங்கியது. சில போர்களைச் செய்தான். சாலியூர், முதுவெள்ளிலை என்னும் ஊர்களைத் தன் நாட்டோடு இணைத்துக் கொண்டான்.

புலவர்கள் அவனுடைய போர் ஆசை தணியும் காலம் என்று வரும் என்று ஏங்கினார்கள். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கும் மக்களுக்கு உறுதி தரும் பொருள்கள். போர் செய்வதனால் பொருளும் புகழும் கிடைக்கின்றன. பொருளை மட்டும் ஈட்டினால் போதுமா? மற்றவற்றையும் குறிக்கோளாகக் கொண்டு அதற்கு ஏற்ற வகையில் முயற்சி செய்வது மக்கள் கடமை.

பாண்டியன் நெடுஞ்செழியன் இன்ப வாழ்வைத் தக்கபடி நுகரவில்லை. போர் ஆசை அவன் இன்பத்துக்குத் தடையாக நின்றது. அதனையே நக்கீரர் நெடுநல் வாடையால் புலப்பட வைத்தார். போரினால் அறத்துக்கு இடையூறு நிகழ்கின்ற தென்பதை வற்புறுத்தினால் ஒருகால் அரசன் அமைதி பெறுவானோ என்ற நினைவு புலவர்களுக்கு உண்டாயிற்று. அதற்கு ஏற்ற செவ்வியும் கிடைத்தது.

போருக்கு ஆயத்தம் செய்வதிலும் படைகளுக்குரிய வசதிகளைச் செய்வதிலும் அரசன் ஈடுபட்டிருந்