பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

பாண்டியன் நெடுஞ்செழியன்

டாக மதுரைக் காஞ்சி என்ற பெயரோடு ஒரு நூலை இயற்றத் தொடங்கினார்.

சொல்லுக்குப் பஞ்சமில்லா வாக்கு வளமும், கருத்துக்குப் பஞ்சமில்லா அறிவு வளமும், அழகாகச் சுவை நிரம்பப் பாடும் கவி வளமும் படைத்த மருதனாருக்குக் கவி பாடுவது ஒரு விளையாட்டு. அது அவருக்கு இன்பம் தருவதோடு மக்கள் அனைவருக்கும் இன்பம் வழங்கும் தகைமையது. நெடும் பாட்டாக அவர் பாடப் போகிறார் என்ற செய்தியை அறிந்து புலவர் களித்தனர். தமிழ்ச் சுவை தேரும் தகைமையினர் கவியின் உதயத்தை எதிர் நோக்கிக் கொண்டிருந்தனர்.

புலவர் மதுரைக் காஞ்சியைப் பாடி முடித்தார். 782 அடிகளையுடைய அந்தப் பாட்டு, பாண்டிய மன்னரின் மரபைப் பாராட்டியது. நெடுஞ்செழியனது வீரத்தையும், கொடையையும், பிற நல் இயல்புகளையும் விளக்கியது. பாண்டி நாட்டின் நில வளப்பத்தையும் ஐந்திணை இயல்பையும் விரித்துரைத்தது. மதுரைமாநகரின் அமைப்பையும் அங்குள்ள அங்காடிச் சிறப்பையும் செல்வ நிலையையும் மக்கள் பொழுது போக்கும் முறையையும் தனித் தனியே எடுத்துக் காட்டியது. புலவர்கள் அதனைக் கேட்டுக் கூத்தாடினர். ‘நெடுஞ்செழியன் இதைக் கேட்டுத் திருந்தினாலும் திருந்தாவிட்டாலும் தமிழ்த் தாய்க்கு ஒரு புதிய அணிகலன் கிடைத்துவிட்டது’ என்ற உவகையில் பலர் ஆழ்ந்தனர்.

எந்த நூலானலும் தக்கார் கூடிய அவையில் அரங்கேற்றுவது அக்காலத்து வழக்கம். ஆகவே, மதுரைக் காஞ்சியின் அரங்கேற்றத்தையும் பெருவிழா