பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

பாண்டியன் நெடுஞ்செழியன்


படைகளை ஆயத்தம் செய்தான்; புதிய படைகளையும் சேர்த்தான். பெரும் போராக மூள இடம் இல்லையென்று அமைச்சர்கள் சொன்னார்கள். ஆதலால் பெரும் படை திரட்டவில்லை.

‘சேரமான் படை திரட்டுகிறான்; மதுரையைத் தாக்கவேண்டும் என்பது அவன் எண்ணம்’ என்ற செய்தியை ஆராய்ச்சியில் வல்ல ஒற்றர்கள் கொண்டு வந்தார்கள். இந்தச் செய்தியை முதலில் நெடுஞ்செழியனிடம் தெரிவிக்காமல் அமைச்சர்கள் தமக்குள்ளே கலந்து ஆராய்ந்தார்கள். கடைசியில் அரசனுக்குத் தெரிவித்துத் தக்கபடி பாதுகாப்புக்குரியவற்றைச் செய்யவேண்டு மென்று தீர்மானித்தார்கள்.

அரசனிடம் செய்தியைத் தெரிவித்தபோது அவன் திடுக்கிடவில்லை. “நல்ல சந்தர்ப்பம் வருகிறது. பாண்டிய வீரர்களின் வீரத்தையும் உங்களுடைய அறிவையும் என்னுடைய மனத்திண்மையையும் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கிறது. இருந்த இடத்தில் இருந்தபடியே இந்தப் பயிற்சி கிடைப்பது எனக்குப் பெரிய ஊதியம்” என்று அதை வரவேற்றான். சிங்கக் குட்டி என்று ஒருவர் சொன்னது எவ்வளவு பொருத்தம்!

அரசன் இளையவனென்ற ஒன்றை மாத்திரம் எண்ணிச் சேரன் முற்றுகையிட வருகிறான் என்பதை மதுரையில் உள்ளவர்கள் உணர்ந்துகொண்டார்கள். “மற்றவர்களை அவன் மறந்துவிட்டான். மதுரை எப்போதும் மாற்றானுக்கு இடம் கொடாது என்பதை உணரப் போகிறான்” என்று பேசிக்கொண்டார்கள்.