பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

பாண்டியன் நெடுஞ்செழியன்

மதித்து ஒழுகுகிறவர்கள். அவர்களால் தீங்கு வர இடம் இல்லை. ஒருகால் சொன்னதைக் கேளாமல் அரசன் தான் போகிற போக்கிலே போய் மற்றவர்களைப் புறக்கணிப்பானானால், பல காலமாக இருந்து அரசியல் தேரை இழுக்க உதவும் சான்றோர்களுக்கு மனத்தில் சற்றே வெறுப்புத் தோன்றலாம். ஆனாலும் அவர்கள் கைவிடமாட்டார்கள்.

ஒரு விதத்தில் அரசன் இளைஞனாக இருப்பது நன்மைதான். நல்ல வகையில் அவனுக்கு அறிவுரை கூறிக் கோலோச்சும்படி செய்யலாம். மனிதன் வளர வளர ஆசையும் பாசமும் வளர்கின்றன. இளம் பருவத்தில் அவன் உள்ளத்தில் அத்தனை மாசு இருப்பதில்லை. ஆதலால்தான் இளமையில் கல்வி கற்கும் நல்ல வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். இந்த அரசனுக்கும் இப்போதிருந்தே நல்ல பழக்கங்கள் வந்துவிட்டால் பின்னால் மாறமாட்டான்; மற்றவர்களுடைய துணையின்றியே திறமையோடு அரசாட்சியை நடத்துவான்.

இவ்வாறெல்லாம் எண்ணிய அமைச்சரும் பிறரும் மிக்க மகிழ்ச்சியோடு நெடுஞ்செழியனுக்கு முடி சூட்டி அரசனாக்கி அவனை வணங்கினார்கள். நேற்றுவரையில் அரண்மனையில் ஓடியாடித் திரிந்த இளம் பிள்ளை இன்று அரசனாகிவிட்டான். நேற்றுவரையில் சிட்டுக் குருவிபோல ஒரு கவலையும் இல்லாமல் பறந்து திரிந்தவனுக்கு இன்று தலையின்மேல் பாண்டிய குலத்துக்குரிய முடி ஏறினவுடன் கவலைகளும் ஏறிவிட்டன. அரச பதவி யென்றால் எளிதா?