பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
துப்பாக்கியைத் தொடமாட்டேன்


ஜவகர் ஒருநாள் வேட்டைக்குத்
தனியே கிளம்பிச் சென்றனரே.
அவரது கையில் துப்பாக்கி
ஆயுத மாக இருந்ததுவே.

குட்டி மான் அவர் முன்னாலே
குதித்து ஓடி வந்ததுவே.
சுட்டார் ஜவகர் உடனேயே.
துடித்துக் கொண்டே மான்குட்டி,

வந்து ஜவகர் காலடியில்
மயங்கி வீழ லானதுவே!
அந்தக் காட்சி ஜவகரையே
அதிகம் கலக்கி விட்டதுவே.

‘எவர்க்கும் கெடுதி செய்தறியேன்!
என்னைச் சுடுவது சரியாமோ?’
ஜவகரைப் பார்த்துக் கேட்பதுபோல்
தரையில் கிடந்தது மான்குட்டி.

57