பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வஞ்சினம் வெடித்தது

25

எதிர்ப்பதில் பயன்படும். தலைவர்கள் பலரானால் கருத்து வேறுபாடு ஒவ்வொரு கணத்தும் எழும்” என்று அறிவிலும், அநுபவத்திலும் சிறந்தவனைப் போல் அவன் பேசினான். அத்தனையும் உண்மை. அமைச்சரும் படைத் தலைவர்களும் வியந்தார்கள் என்று மட்டும் சொன்னால் போதுமா? அவர்களுக்குச் சிறிதளவு இருந்த ஐயமும் பஞ்சாய்ப் பறந்து போய்விட்டது. “இந்த அரசனைத் தலைவனாகப் பெற்றுப் போர் செய்யக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்று யாவரும் ஒருமுகமாகக் கூறினர்.

அரண்மனையில் இருந்த சிலர் நெடுஞ்செழியனது இளமையை நினைந்து அஞ்சியது அவனுக்குத் தெரியவந்தது. பகைவர்களும், “இவன் சிறிய பையன்” என்று எள்ளியதாகக் கேள்வியுற்றான். அவன் கண்களில் கனல் கொப்புளித்தது. நெஞ்சில் வீரம் கனன்றது. அரச குலத்தின் மிடுக்கு அவன் நாவில் உருவாகியது. வஞ்சினம் கூறத் தொடங்கினான்:

“இதை யாவரும் கேளுங்கள். ‘இவன் நாட்டைப் பெரிதென்று பாராட்டிச் சொல்கிறவர்களைப் பார்த்துச் சிரிக்கத்தான் வேண்டும். இவன் சிறியவன். இவனால் என்ன செய்ய முடியும்?’ என்று அவ்வேந்தர்கள் பேசிக்கொள்கிறார்களாம். பெரிய பெரிய யானைகளும் தேரும் மாவும் படை வீரர்களும் மிகுதியாக இருப்பதாக எண்ணி இறுமாந்துகொண்டிருக்கிறார்கள். பாண்டி நாட்டு வீரர்களுடைய வலிமையை எண்ணி அவர்கள் அஞ்சவில்லை. சேரனுக்குப் பழைய கோபம் வேறு இருக்கும். என்ன என்னவோ சிறுசொற் சொல்லி எள்ளி நகையாடுகிறார்களாம்!”