பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

பாண்டியன் நெடுஞ்செழியன்

களத்தில் பெரிய யானைகளைத் தொலைத்து வீரங்காட்டி முகத்திலும் மார்பிலும் பட்ட விழுப்புண்களோடே அவ் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் புண்ணைக் கண்டு நல்ல வார்த்தை சொல்லிவரப் பாண்டியன் தன் கூடாரத்திலிருந்து புறப்பட்டுவருகிறான். வாடைக் காற்றுச் சில்லென்று வீசுகிறது. அங்கே உள்ள வட்ட விளக்கின் சுடர் தெற்குப் பக்கமாகச் சாய்ந்து எரிகிறது. படைத் தலைவன் கையிலே வேலை ஏந்திக் கொண்டு முன்னே செல்கிறான். அந்த வேலில் வேப்ப மாலை கட்டியிருக்கிறது. பாண்டியனது அடையாள மாலை அல்லவா அது? முன் செல்லும் சேனாபதி புண் பட்ட வீரர்களை அரசனுக்கு ஒவ்வொருவராகக் காட்டிக் கொண்டே செல்கிறான்.

வழியிலே சேணத்தைக் கலைக்காத குதிரைகள் நிற்கின்றன. மழைத் துளி மேலே விழுவதனால் அவை உடம்பைச் சிலிர்த்து அந்தத் துளிகளே உதறுகின்றன. இரு மருங்கும் கூடாரம் அமைந்த அந்த வீதி வழியே செல்கிறான் அரசன். அவன் இடத் தோளிலே போட்டிருக்கும் மெல்லிய துகில் நழுவுகிறது. அதை அப்படியே இடக் கையால் இடுக்கிக்கொள்கிறான். அருகிலே வலிமையையுடைய கட்டிளங்காளை ஒருவன் வாளைத் தோளிலே மாட்டியபடி நிற்கிறான். அவனுடைய பின் கழுத்தின் மேலே வலக்கையை வைத்துக்கொண்டு நடக்கிறான் அரசன். தவ்வென்று மழைத் துளி வீச, அதற்கு மறைப்பாக ஒருவன் குடை பிடிக்கிறான். முத்துமாலை தொங்கும் கொற்றக் குடை அது. இப்படி, புண்பட்ட வீரர்களைக் கண்டு முகமலர்ச்சியோடு விசாரிப்பதற்காக நடுஇரவிலும் தூங்காமல் சில வீரர்களோடு சுற்றி வருகிறான் பாண்டியன்.