பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

பாண்டியன் நெடுஞ்செழியன்

மல் போர் செய்வது அக்காலத்தில் வழக்கம் அன்று. போர் நிகழ்வதற்கு முன் அதனை அறிவிப்பதோடு, பகையரசன் நாட்டிலுள்ள பெரியோர்களையும் மங்கையரையும் குழந்தைகளையும் வேறு இடத்துக்குப் போய் விடும்படி எச்சரிப்பார்கள். போரில் அவர்களுக்கு ஊறுபாடு நிகழக் கூடாதென்பது பகைவர்கள் கருத்து. பிறகு ஆநிரைகளை ஓட்டிவந்துவிடுவார்கள். அவற்றுக்குத் தீங்கு நேரக்கூடாது. “சண்டைக்கு எடுபிடி மாடு பிடி” என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அது இந்த ஆநிரை கொள்ளும் வழக்கத்தையே புலப்படுத்துகிறது. இவ்வாறு ஒரு முறையை மேற்கொண்டு போர் நிகழ்த்தியதால் அறப் போரென்று சொன்னார்கள்.

போர் முழக்கம் நெடுஞ்செழியன் காதில் விழுந்தது. ஏழு பேர் ஒன்றாகச் சேர்ந்துகொண்டார்கள் என்பதை உணர்ந்தான். குடிமக்களிற் சிலருக்குச் சற்றே அச்சம் தோன்றியது. “இன்னும் பிள்ளைப் பிராயம் நீங்கவில்லை. அதற்குள் இவ்வளவு பேரோடு எப்படிப் பொருவது?” என்று தமக்குள் பேசிக்கொண்டார்கள். ஆனால் பாண்டிய மன்னன் குதித்தெழுந்தான். உலகமே எதிர்த்து வந்தாலும் அஞ்சாதவனைப் போல மிடுக்கோடு பேசினான். “ஆயிரம் எலிகள் வந்துவிட்டனவே என்று பாம்பு அஞ்சுவதில்லை. பெரிய யானை ஆயிற்றே என்று சிங்கக் குட்டி சோர்ந்து போவதில்லை. மூட்டை மூட்டையாகப் பஞ்சு இருக்கிறதே என்று நெருப்பு நிற்பதில்லை. ஏழு பேர் தலைவர் ஒரு படைக்கு என்றால், அதுவே அதற்குக் குறை. படை முழுவதும் ஒருவர் தலைமையில் இயங்கினால்தான் அதன் வீரம் அனைத்தும் பகைவனை