பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெடுநல் வாடை

49

முற்றிக் குலை குலையாகத் தொங்குகின்றன. பூம்பொழிலிலுள்ள மரங்களின் கிளைகளிலிருந்து மழைத்துளிகள் சொட்டிக்கொண்டே இருக்கின்றன.

இனி, சிறிதே நகரத்துக்குள் போவோம். இது அரசனுடைய இராசதானி நகரமாகிய மதுரை. பெரிய பெரிய வீதிகள். மழை நீர் ஓடுகிற இந்தச் சமயத்தில் பார்த்தால் வீதிகளெல்லாம் ஆறுகளைப் போலத் தோன்றுகின்றன. இந்தக் குளிரில் மழைத் தூறலைச் சிறிதும் பொருட்படுத்தாமல் அயல் நாட்டு மக்கள் திரிகிறார்கள். அவர்களுக்குத்தான் எவ்வளவு வலிமையான உடம்பு! தழையும் பூவும் சேர்த்துக் கட்டிய மாலையைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். கள்ளை நிரம்ப உண்டிருக்கிறார்கள். பகற்பொழுது போனாலும் அவர்கள் வீதிகளில் திரிகிறார்கள்.

வீட்டுக்குள்ளே கொஞ்சம் போவோமா? அங்குள்ள மகளிரின் அழகுதான் என்னே! சங்கைக் கடைந்து செய்த அழகிய வளைகளை அவர்கள் அணிந்திருக்கிறார்கள். பருத்த தோளும் மெத்தென்ற சாயலும் முத்தைப் போன்ற பல்லும் காதிலே அணிந்த குழையோடு சென்று மோதும் குளிர்ந்த அழகிய கண்னும் படைத்தவர்கள் அவர்கள். எங்கும் மேக மூட்டமும் தூறலுமாக இருக்கும் இப்போது அவர்கள் மாலைப் பொழுதை அறிந்துகொண்டு விளக்கேற்றப் புகுகிறார்கள். எப்படி மாலை வேளை வந்ததென்று அறிந்தார்கள் தெரியுமா? அவர்கள் காலையிலே பிச்சியரும்பைப் பறித்துப் பூந்தட்டிலே வைத்து ஈரத் துணியால் மூடியிருந்தார்கள். இப்போது அரும்புகள் அவ்வளவும் குப்பென்று மலர்ந்திருக்கின்றன. அந்தி மாலை வந்தால் மலரும் மலர் பிச்சி. அம்மலர்