பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

பாண்டியன் நெடுஞ்செழியன்

தைக் கண்டு படைவீரர் அத்தனை பேரும் ஊக்கமுற்றனர். ‘வீட்டில் இனிதாகப் பொழுது போக்கவேண்டிய இளம் பருவத்தினனாகிய இவனே நேரில் போர்க்களத்தில் வந்து அஞ்சாமல் நின்று போர் செய்யும்போது, இவனுக்காக உயிரையும் வழங்கி வெற்றி வாங்கித் தரவேண்டியது நம் கடமை’ என்ற உணர்ச்சி அவர்களுக்கு மேலோங்கி நின்றது.

முதல் போரில் சோழனது படை கை விஞ்சியது போலத் தோன்றியது. ஆயினும் தொடர்ந்து தாக்குவதற்கு அப்படைக்குத் துணைப்படை உதவி செய்யவில்லை. இருப்பினும் வெற்றி தோல்வி யார் பங்கில் என்று சொல்ல முடியாத நிலையே நீடித்தது. சோழன் இரண்டு காரியங்களைச் செய்துவந்தான். தன் படைக்குத் தலைமை பூண்டு போர் செய்ததோடு மற்ற நண்பர்களையும் அவ்வப்போது ஊக்கிவந்தான். அந்தப் போரில் அவர்களுக்குத் தன்னளவு ஊற்றம் இல்லையென்ற எண்ணம் அவன் உள்ளத்தினூடே இருப்பதை இந்தச் செயலால் அவன் வெளிப்படுத்திக் கொண்டான். வேளிர் படைகள் பாண்டியன் படையை எதிர்த்து நிற்கும் ஆற்றலை இழந்தன.

சமயம் பார்த்து நெடுஞ்செழியன் சிங்கவேறு போல் பாய்ந்தான். இது கன்னிப் போராக இருப்பினும் அவனுடைய போர்த் திறமை கணத்துக்குக் கணம் நண்பர்களுக்கு வியப்பையும் பகைவர்களுக்கு அச்சத்தையும் உண்டாக்கியது. மெல்ல மெல்லப் பாண்டிப்படை முன்னேறியது. வேளிர் படையிற் சிலர் படையை விட்டே ஓடிப்போயினர். அது கண்ட மற்றவர்களுக்கும் சோர்வு உண்டாயிற்று.