பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

பாண்டியன் நெடுஞ்செழியன்

“நீ நண்பர்களின் குடியை உயரச் செய்வாய். பகைத்தவர் அரசைக் கைக்கொள்வாய். புகழையும் முத்தையும் முத்துக் குளிப்பவரையும் அருகில் சிறிய ஊர்களையும் உடைய கொற்கைக்குத் தலைவனே, தெற்கிலுள்ள பரதவர்களைப் பொருத சிங்கம் போன்றவனே, பிறருக்குக் கிடைப்பதற்கரிய பொருள்களை எளிதிலே கைக்கொண்டு அவற்றை உனக்கென்று பாதுகாத்து வைத்துக்கொள்ளாமல் பிறருக்குக் கொடுப்பவன் நீ. நம்முடைய இராசதானி நகரத்திலே சுகமாக இருக்கலாம் என்று எண்ணாமல், பகைவரைப் பொரும் பொருட்டு மலைகளையும் காடுகளையும் கடந்து அவர்களுடைய உள் நாட்டிலே புகுந்து அரண்களைக் கைப்பற்றிப் பல காலம் அங்கங்கே தங்கிச் சிறப்புடன் போரில் வெற்றி கொள்ளும் அரசனே, பகைவர் நாட்டிற் சென்று அவர்களுடைய காவற் காடுகளை அழித்து வயல்களை எரியூட்டி, நாடென்னும் பெயர் மாறிக் காடு என்னும் பெயர் உண்டாகவும், பசுமாடுகள் தங்கின இடங்களில் காட்டு விலங்குகள் உறையவும், ஊராக இருந்த இடங்கள் பாழாகவும், மங்கையர் கூத்தாடி மகிழ்ந்த இடங்கள் பேயாடும் இடங்களாகவும், அங்குள்ள குடிமக்கள் பசியால் வருந்தி உறவினர்களைச் சென்று அடையவும், பெரிய மாளிகைகளில் இருந்த குதிர்கள் இப்போது சரிந்து போக அதில் கோட்டான் இருந்து கதறவும், செங்கழுநீர் பூத்துப் பொலிந்த பொய்கைகளில் கோரை வளர்ந்து மண்டவும், எருதுகள் உழுத வயல்களில் காட்டுப் பன்றிகள் ஓடித் திரியவம் அந் நாடுகள் பாழாகிவிட்டன. யானைகளுடனும் படைகளுடனும் முருகன் போருக்குப் புறப்பட்டது போலப் பகைவரிடம் சென்று, வானத்தில் ஆரவாரம்