பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



புதிய வீடு

1

ன்ன பளமை அடிச்சுக்கிட்டே இருக்கியே; நாளைக்கு ஆடிப் பதினெட்டு; கொமரிசுபரரை மறந்துட்டியா, புள்ளே? அரிசி, பருப்பு, காய் எல்லாம் வச்சிருக்கியா?” என்று கேட்டான் மாரப்பக் கவுண்டன்.

இன்னிக்குத்தான் புதுமை பேசிறியே. எல்லாத்தையும் பாக்குக் கடிக்கிற நேரத்திலே சேத்துடமாட்டேனா?” என்று பெருமிதத்துடன் கூறினாள் பழனியாயி.

வருஷத்துக்கு ஒரு முறை அவர்கள் காவேரிக்கு நீராடச் செல்வார்கள். கொங்கு வேளாளக் கவுண்டர்கள் அவர்கள். காவிரியாறு அவர்கள் ஊரிலிருந்து இருபத்திரண்டு மைல் தூரத்தில் இருக்கிறது. மோகனூர் என்ற ஊருக்குப் போய், அங்குள்ள காவிரியில் நீராடிவிட்டுக் காவிரிக்கரையில் இருக்கும் அசலதிபேசுவரரையும் மதுகரவேணி யம்மையையும் தரிசித்து வருவது அவர்கள் வழக்கம். அசலதிபேசுவரர் என்றா சொன்னேன்? அது, அந்த ஊர்க் காரர்களும் புராணமும் சொல்லும் பேர். ஆனால் நம்முடைய கவுண்டருக்கு அவரைக் குமரீசுவரர் என்று சொன்னால்தான் தெரியும். ஆராய்ச்சிக்காரர்கள் அதைக் கேட்டு ஒரு புதிய விஷயத்தைக் கண்டுபிடித்தார்கள். 'மோகனூருக்குக் குமரி என்பது பழம் பெயர். அதனால் சுவாமிக்குக் குமரீசுவரர் என்ற பெயர் வந்திருக்கிறது. '‘கொங்குதண் குமரித்துறை’ என்று அப்பர் சுவாமிகள் பாடியிருப்பது இந்தக் குமரித் துறையைத்தான்" என்று தங்கள் அறிவுப் பயணத்தைத் தொடங்கினார்கள். அதைப்பற்றிய கவலை இங்கே நமக்கு எதற்கு?