பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

திருக்கிறேன். தாடி வளர்த்துக் கொண்டு நாமம் போட்டுக் கொண்டு (வைஷ்ணவ நாயுடு அவர் என்று எண்ணுகிறேன்) பார்ப்பதற்குக் கம்பீரமாக இருந்தார்.

ரங்கராஜூவுக்கு அடுத்து வாசகர்களின் கவனத்தை அதிகமாகக் கவர்ந்தவர் என்று வடுவூர் துரைசாமி ஐயங்கார் என்பவரைச் சொல்ல வேண்டும். 1923, 24 முதல் 27 வரையில் தஞ்சையில் கல்யாண சுந்தரம் ஹைஸ்கூலில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது பச்சை, மஞ்சள், சிவப்பு அட்டையில் டெமி சைஸில் அவர்கள் நாவல்கள் ஒவ்வொன்றாக அப்பாவுக்குத் தெரியாமல் ரெயில்வே ஸ்டேஷன் ஹிக்கின்பாதம்ஸில் வாங்கிப் படித்த நினைவிருக்கிறது. படித்துவிட்டு வீட்டுக்கு எடுத்துப் போனால் அப்பா சண்டை பிடிப்பாரென்று அப்போது மேல வீதியில் தெற்குக் கோடியில் இருந்த ஒரு லைப்ரரிக்கு இனாமாகப் புஸ்தகத்தைக் கொடுத்து விடுவேன். இப்படிப் படித்த நாவல்கள் என்று கனகாம்புஜம் அல்லது கள்வனும் விலை மகளும், வஸந்த கோகிலம், பூரண சந்திரோதயம், விலாஸ்வதி, திகம்பர சாமியார், மேனகா இவை நினைவுக்கு வருகின்றன. ஒரு நாவல் கலைப் பிரக்ஞையுடன், சுலபமாகப் படிக்கக் கூடிய நடையுடன், விரஸமான விஷயங்களையும்கூட அதிக விரலம் தட்டாமல் எழுதுவதில் சிரத்தையுடன் எழுதிய வடுவூரார் உண்மையிலேயே இலக்கியப் பிரக்ஞை உடையவர் என்பதில் சந்தேகத்துக்கிடமே இல்லை.

ரெயினால்ட்ஸின் மட்டமான நாவல்களைத் தழுவி எழுதினார் பெரும்பாலும் என்றாலும் அவர் விக்டர் ஹ்யூகோவின் Les Miserables என்கிற நாவலை அற்புதமாகத் தமிழில் தழுவி எழுதியிருக்கிறார். முதநூலைப் போலவே கனகாம்புஜம் அல்லது கள்வனும் விலைமகளும் என்கிற நாவல் அமைந்திருப்பதாகச் சொன்னால் அதில் தறவில்லை.