பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103

குமரியின் மூக்குத்தி

 யை விட்டே நிறுத்திவிட்டார்கள்; எனக்குச் சம்பளம் கூட்டிப் போட்டார்கள்."

"அதுதான் அப்படிப் பேசுகிறீர்களோ?” என்று அவள் கோபம் குறையாமல் கேட்டாள். அவள் அடிபட்ட புலிபோலச் சீறினாள். தன் கணவனுடைய நேர்மையை நினைத்துப் பார்க்கவில்லை. அவனுக்குச் சம்பள உயர்வு கிடைத்ததை அவள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. தனக்குத் திருட்டுப் பட்டம் கட்டி ஒட்டியவனுக்குத் தண்டனை கொடுக்கவேண்டும் என்ற உணர்வே மேலோங்கி நின்றது.

முனிசாமிக்கு இப்போது கோபம் வந்தது. "உனக்கு இப்போது ஒன்றும் விளங்காது. திருட்டுத் தொழில் கேவலமானது. நான்ஆபீஸிலே ஒரு திருடனைக் கண்டுபிடித்தேன். வீட்டிலோ ஒரு திருடியை வைத்துக்கொண்டிருக்கிறேன். அங்கே எனக்குச் சம்பள உயர்வு கிடைக்கிறது. இங்கே வசவு கிடைக்கிறது! நீ புத்தியுடன் தான் பேசுகிறாயா?”

பேச்சு வளர்ந்தது. முனிசாமி வளர்த்தவில்லை. வெளியில் எழுந்து போய்விட்டான். ஒரு வாரம் அவர்கள் இருவரும் பேசவில்லை. கணவன் மனைவியருள் இது இயல்பு தானே?

பிறகு பாக்கியம் தன் பிழையை உணர்ந்தாள். கண னிடம் நயமாகப் பேசினாள் தான் செய்ததற்காக அழுதாள். 'ஆத்திரத்திலே ஒன்றும் தெரியவில்லை. உங்களுக்கு உங்கள் நேர்மையினால் அஞ்சு ரூபாய் உயர்ந்தது. எனக்கு என் திருட்டுத்தனத்தால் வேலையே போய்விட்டது. நான் பொல்லாதவள். உங்கள் அருமையைத் தெரிந்துகொள்ளாத பேய்" என்று சொல்லி வருந்தினாள். அவள் வேறு வீட்டைப் பிடித்துக்கொண்டு வேலை செய்யத் தொடங்கினாள். அந்த வீட்டுக் குழந்தையைத்தான் பொன்னம்மா அன்று பள்ளிக்கூடத்துக்கு அழைத்து வந்தாள்.