பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

குமரியின் மூக்குத்தி


'வரமாட்டேன்' என்றாள் அவள்.

"ஏன்?" என்று குழந்தை மறுபடியும் கேட்டான்.

'ஏனோ!” என்று அவள் சொன்னாள்.

அவளே அவன் இதற்குமுன் பார்த்ததில்லை. அவள் எசமானர் வீட்டுக்குப் பழக்கமானவளா? பின், ஏன் அவள் இந்த இரண்டு மூன்று மாசகாலமாக வரவே இல்லை? குழந்தை கேட்ட கேள்வியைத் தானே கேட்கவேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான். அவள் சொன்ன, "ஏணோ!" என்ற பதிலை விண்டு விளக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ள எண்ணினான். முன்பின் முகம் அறியாத இளம்பெண்ணோடு துணிந்து பேசலாமா? ஆனால் இவள் யார்?' என்றதை மாத்திரம் தெரிந்து கொள்ளத் துணிந்தான். "துரை, அது யார்?' என்று கேட்டான்.

அதற்கு விடை கிடைப்பதற்குமுன் அந்தப் பெண் ஒரு பார்வையினால் அவனை ஒரு வெட்டு வெட்டிவிட்டுப் பள்ளிக்கூடத்துக்குள் போய்விட்டாள். அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்த தங்கவேலன் மறுபடியும் துரையை, 'இவள் யார்?' என்று கேட்டான்.

குழந்தை பதில் சொன்னான். அதைக் கேட்டவுடன் தங்கவேலுவுக்குப் பெருத்த ஏமாற்றம் உண்டாகிவிட்டது. குழந்தை என்ன சொன்னான் தெரியுமா? "பாக்கியத்தின் பெண்’ என்றான். அதைக் கேட்டவுடன் தங்கவேலன் முகம் வாடியது. எதையோ பறிகொடுத்தவன் போல் ஆகிவிட்டான். ஏன்? ஒரு மாசத்துக்கு முன் நடந்த நிகழ்ச்சிதான் காரணம்.

***

"திருட்டுக் கை நிற்குமா? தவிட்டுக்கு வருகிற கை தான் தனத்துக்கு வரும். இன்றைக்கு இந்தச் சின்னப் பொம்மையைத் திருடின கையே நாளைக்கு ஏதாவது துணிமணியை எடுக்க நீளும்!” என்று இரைந்தான் தங்கவேலன்.