பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதிய வீடு

137

 -

அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அலங்காரம் செய்தார்கள். சாமண்ணா குருக்கள் மகாகெட்டிக்காரர். வருகிறவர்களிடம் நயமாகப் பேசி மேலும் மேலும் ஈசுவர கைங்கரியத்தில் ஈடுபடும்படி செய்து விடுவார். அடிக்கடி வரும் மாரப்பக் கவுண்டனுக்கும் அவருக்கும் பழக்கம் உண்டாயிற்று. கவுண்டன் ஒரு நல்ல புள்ளி என்று அவர் தெரிந்துகொண்டார்.

“என்ன கவுண்டரே, நீங்கள் நவராத்திரி உற்சவத்தைப் பார்த்ததில்லையே? ராத்திரி இருந்து அம்பிகையின் அலங்காரத்தைப் பாருங்கள்' என்று குருக்கள் சொன்னார். அன்று இரவு மாரப்பன் அங்கே தங்கினான். என்ன அலங்காரம் என்ன அழகு! அவன் அந்தக் கோலாகலத தில் மெய்மறந்து நின்றான்.

அந்தக் காலத்தில் கோயிலில் சின்ன மேளம் பிரமாதமாக இருக்கும். நவராத்திரியில் சதிர்க்கச்சேரி நடைபெறும், பரதநாட்டியந்தான். அதைப் பார்ப்பதற்காக நெடுந்தூரத்திலிருந்து ஜனங்கள் வருவார்கள். கரூரிலிருந் தும் நாமக்கல்லிலிருந்தும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் வருவார்கள்.

மாரப்பக் கவுண்டன் சதிர்க்கச்சேரியைக் கண்டு கண்டு வியந்தான். அதுவரையில் சதிரையே அவன் பார்த்ததில்லை. மறுநாள் மோகனூரை விட்டுப்புறப்படவே அவனுக்கு மனசு வரவில்லை. அன்றும் இருந்து, நவராத்திரி உற்சவத்தைப் பார்த்துக்கொண்டு புறப்பட்டான். ஊரில் உள்ள காடு அவனை வா, வா என்று அழைத்தது. ஊருக்குப்போய் அங்கு உள்ளவர்களிடமெல்லாம் அந்தக் கங்காச்சியைப் பற்றிச் சொன்னான். தாசி ஆடுவதை வருணித்தான்.

"பொம்பளையா வெட்கங் கெட்டுப்போய் வந்து ஆடின?' என்று பழனியாயி கேட்டாள்.