பக்கம்:நான்கு நண்பர்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 மான் தப்பி ஓடியதும், எலி பக்கத்தில் இருந்த பொந்துக்குள் ஓடி ஒளிந்துகொண்டது. காக்கை பறந்து போய் மரத்தில் உட்கார்ந்துகொண்டது. ஆமையால் ஒட முடியுமா ? அது மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது

வேடன் ஆமையைப் பார்த்துவிட்டான். உடனே அதை பிடித்தான். ‘மான் கிடைக்கவில்லை. இந்த ஆமையாவது கிடைத்ததே. இதைச் சமைத்துச் சாப்பிடலாம்’ என்று நினைத்தான். ஆமையை வில்லுடன் சேர்த்து நன்றாகக் கட்டினான். தூக்கிக் கொண்டு நடந்தான் !

“ஐயோ, ஆமை வேடனிடம் அகப்பட்டுக் கொண்டதே” என்று காக்கையும் எலியும், மானும் கவலைப்பட்டன. அப்போது, ஆமையைக் காப்பாற்றக் காக்கை ஒரு யோசனை சொன்னது. அது மிகவும் அருமையான யோசனை.

வேடன் போகும் வழியில் ஓர் ஏரி இருந்தது. அந்த ஏரிக் கரைக்கு காக்கை, மான் எலி மூன்றும் சென்றன. வேடன் போவதற்கு முன்பே போய்விட்டன.

ஏரிக்கரையில் மான் செத்ததுபோல் படுத்துக் கொண்டது. மான் தலைமேல் காக்கை உட்கார்ந்து கொண்டு, முகத்தைக் கொத்துவதுபோல் பாசாங்கு செய்தது. எலி சிறிது தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.