பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குன்றுடையான் கதை

79

 வந்து அங்கே அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன் ஆதித்தம் பெற்ற விவரத்தை இந்தக் கதை நெடும் பாட்டுத் தெரிவிக்கிறது.

அண்ணன்மார் இருவரும் இன்று தெய்வமாகப் போற்றப்படுகிறார்கள். அவர்களிடத்திலே கொங்கு நாட்டு வேளாளர்களுக்கு மிகுந்த பக்தியுண்டென்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். ஆண் குழந்தைகளுக்குப் பெரியசாமி, சின்னசாமி என்று பெயர் வைப்பது இவர்களிடையே பெரு வழக்கு. இந்தப் பெயர்கள் வீரர்களான அந்த இரு சகோதரர்களை நினைவூட்டுவனவாகும்.

அவர்களிலே பெரியசாமி பொறுமை வாய்ந்தவர்; நிதானமாக எதையும் ஆலோசித்துச் செய்பவர். சின்னசாமி அப்படியல்ல. மிகுந்த கோபக்காரர். சண்டையென்றால் அவருக்கு மிகுந்த விருப்பம். அவருடைய கோபத்தையும் வீரப் போரையும் வருணிப்பதென்றால் குன்றுடையான் கதையைப் பாட்டாகப் பாடுபவர்களுக்கு ஒரு தனி உற்சாகம். அவர்களுடைய பாட்டிலும், தொனியிலும், நடிப்பிலும் அவருடைய கோபத்தையும் வீரப் போரையும் நாம் உணரலாம்.

சின்னசாமிக்கு ஒரு சமயத்திலே வந்த கோபத்தை விளக்கும் பாடற் பகுதியை மட்டும் இங்கே பார்ப்போம்.

கோபம் பிறந்திட்டது-சின்னருக்குக்
கொள்ளி கொண்டு வீசுதிப்போ
வெள்ளரளிக் கண்கள் ரண்டும்-சின்னருக்குச்
செவ்வரளி பூக்குது பார்
நீல மலர்க் கண்கள் ரண்டும்-சின்னருக்கு
நெருப்புத் தணல் ஆகுதிப்போ
எட்டுக் கட்டு உருக்கி வார்த்த-சின்னருந்தான்
எம வாளைக் கையெடுத்தார்