பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

குமரியின் மூக்குத்தி

"உனக்கு வேறு வேலை கிடைத்தால் தாராளமாகப் போகலாம். நான் தடையாக நிற்க மாட்டேன்" என்பார்.

"போங்கள், எசமான்" என்று போலிக் கோபம் காட்டுவான். அவன்.

அவனுக்கு இப்போது கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தார் ராஜாராம். அவன் பேரில் இருந்த பணத்தில் கொஞ்சம் வாங்கச் சொல்லித் தாம் பாக்கிப் பணத்தைக் கொடுத்துக் கல்யாணத்தைப் பண்ணி வைத்தார். அவன் மாமனர் மாமியார் கோடம்பாக்கத்தில் இருந்தார்கள். அவர்கள் வீட்டோடே அவன் இருக்கட்டும் என்பது ராஜாராம் அபிப்பிராயம். தினமும் சைக்கிளில் வீட்டுக்குப் போகலாம் என்று திட்டம்.

இப்போதெல்லாம் வேலு தோட்ட வேலை செய்கிறதில்லை. அதற்கு வேறு ஆள் வைத்தாகிவிட்டது. கார் வாங்கினதற்காக வேலை மிகுதியாயிற்றோ, வேலை மிகுதியானமையால் கார் வாங்கினரோ தெரியாது; எப்போதும் சுற்றுவதுதான் வேலை. அந்தக் கம்பெனி, இந்த ஆபீஸ் என்று தினம் காரில் ராஜாராம் சுற்றுவார். மனைவி மக்களுடன் வாரத்துக்கு இரண்டு முறை எங்கேயாவது கோயிலுக்குப் போய் வருவார். இன்ன நேரம் வெளியில் போவார் என்ற திட்டம் இல்லை. இருபத்துநாலு மணி நேரமும் காத்திருக்க வேண்டும். வேலு கார் ஓட்டத் தொடங்கியது. முதல் சம்பளம் உயர்ந்தது. கல்யாணம் பண்ணிக்கொண்ட பிறகு பின்னும் உயர்ந்தது. ஆனால்?

2

"'எல்லாம் தெரிந்தவர்களுக்கு முக்கியமான காரியங்கள் தெரிகிறதில்லை' என்று பேச்சை ஆரம்பித்தாள் ராஜாராமின் மனைவி.

"இன்றைக்கு எந்த விஷயத்தில் எனக்கு முட்டாள். பட்டம் கட்டப் போகிறாய்?" என்று கேட்டார் ராஜாராம்.