பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கீரைத் தண்டு

35

மேற்கொண்டான் விசாகன். முருகனுடைய கோபத்துக்குப் பாத்திரமாகாமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் வழியல்லவா? 'ஜீவஹிம்சை செய்துவிட்டோம்,தெரியாமல். இப்போது இரங்குகிறோம். கடவுளே! என்னை மன்னிக்க வேண்டும்!"-இப்படி எண்ணி எண்ணி ஆறுதல் பெற்றான்.

ஆட்டுக்கும் கால் ஆறி வந்தது. மெதுவாக நொண்டி நொண்டி நடக்கத் தொடங்கியது. இப்போதெல்லாம் விசாகன் வாரத்துக்கு ஒரு முறை, சனிக்கிழமையில் தவறாமல் கீரைத் தண்டு வாங்கி ஆட்டுக்குச் சமர்ப்பித்து வந்தான். இன்னும் மூன்று மாசம் இந்த விரதம்.அவன் சங்கற்பம் அது. பாவம்! ஆடு பிழைத்துக் கொண்டது.நன்றாக ஒடியாடித் திரிய வேண்டும்.

இரண்டு மாதம் ஆயின. ஆடு பழையபடி திரியத் தொடங்கியது. அதற்குப் பயந்து விசாகன் கீரைப் பாத்தி போடவில்லை. ஆனல் சனிக்கிழமை விரதம் கடந்துவந்தது. அவன் கீரை வாங்கிக் கொணர்ந்து ஆட்டுக்குக் கொடுத்து வந்தான்.

ஒரு நாள் சனிக்கிழமை. எங்கும் கீரை கிடைக்காமல் கொத்தவால் சாவடிக்குப்போய் நாலு தண்டு வாங்கினான்.அவையும் வாடிப் போன தண்டுகள்.அவனும் அலைச்சலினால் முகம் வாடிப்போனான்.ஆனாலும்உள்ளத்தில் மலர்ச்சி; தான் செய்த காரியத்தால் ஆடு கால் ஒடிந்து உயிரிழந்து போகாமல் பிழைத்துக்கொண்டதே என்ற நினைவு.

வாடிய முகமும் வாடிய கீரைத்தண்டுமாக வந்தவன் வீட்டுக்குள் நுழையாமலே எதிரில் உள்ள குடிசைக்கு அருகில் சென்றான்.

"சின்னத்தம்பி!" என்று கூப்பிட்டான்.

"ஏன் சாமி!" என்று ஓடிவந்தான் அவன்.

"இன்று நல்ல கீரைத்தண்டு கிடைக்க வில்லை. பல இடங்களில் அலைந்தேன். இதுதான் கிடைத்தது. இந்தா!