பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேழி புடிச்சு உழுதால் கலப்பை திணறும். அப்பேர்ப்பட்ட சாவன்னா விவசாயக் கடன்கட்ட முடியாமல் சம்மன், கோர்ட்டு, சிறை என்று அவலநிலைகளுக்கு ஆளாக நேர்கிறது. இரண்டாம் பாகத்தில் சாவன்னாவின் சோக சித்திரம் மனத்தை அதிரச் செய்கிறது. சிறைச்சாலை அவரை எப்படி வாட்டி எடுத்திருக்கிறது என்பதை சிரிப்பில் மீறிவரும் இருமல் உணர்த்து கிறது. பழைய பெட்போர்டு மோட்டாரைப் போல் பெரிய ஹாலிங் காரத்துடன் உருமி சளியைத் துப்பினார் என்கிறார் ஆசிரியர். ஒரு சமுசாரியை குற்றவாளியாய், நோயாளியாய், பிச்சைக் காரனாய் ஆக்கும் புண்ணியத்தைச் செய்கிறது இந்த நாடு. 'சமுசாரிய பொதிமாடா போட்டு வசக்கி அடிக்கிது நாடு' என்று கோணங்கி விவசாயிகளைச் சுரண்டும் இந்தச் சமூக அமைப்பைச் சித்திரித்துக் காட்டுகிறார். தி.சு. இளஞ்செழியனின் வேதாளம் சொன்னகதை பெங்களூரில் மேடை பல ஏறிப் பரிசும் பாராட்டும் பெற்ற நாடகம், பஞ்ச லட்சணங்களைப் படம் பிடித்துக் காட்டும் இலக்கியம் மாதிரி, இது லஞ்ச லட்சணங்களை ஒரு மருத்துவமனையைக் களமாக வைத்து அரங்கேற்றிக் காட்டுகிறது. இன்றைய இந்தியாவை - இன்றைய நெருக்கடியான வாழ்க்கை யைப் பிரதிபலித்துக்காட்டும் மேற்சொன்ன இரண்டு படைப்புகளும் இலக்கியம் என்பது வாழ்க்கையை முன் கூட்டிச் சொல்வது (Literature always anticipates life. It does not copy it; but it moulds it to its purpose) என்ற ஆஸ்கார் வைல்டின் கருத்தை நயமாய் வலியுறுத்துகின்றன. இத்தொகுப்பில் மூன்று சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. கவிதை உலகத்தில் மட்டுமின்றிச் சிறுகதை உலகத்திலும் கவனத்துக் குரியவராக விளங்கும் கந்தர்வனின் தூக்கம் நடுத்தர வர்க்கத்து இளைஞன் ஒருவனின் ஆகாசக் கோட்டைகள் சீட்டுக்கட்டு வீடாய்ச் சிதறுவதையும் அவன் இளம்வயதிலேயே தூக்கம் இழந்து தவிப்பதையும் வருணிக்கிறது. - சோகம் கொட்டிடும் கவிதைகளே சிறந்த கவிதைகள் என்றான் ஷெல்லி. அது சிறுகதைக்கும் பொருந்தும் என்றால் தனுஷ்கோடி ராமசாமியின் சேதாரம் ஒரு சிறந்த சிறுகதை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/7&oldid=463911" இலிருந்து மீள்விக்கப்பட்டது