பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருட்டுக் குடை மடங்கி மறுநாள் விடிந்தது. தண்டவாளங்களில் முன்போல் பனி விழுந்திருந்தது. கட்டடங்களுக்கு இடுவலில் சூரியன் எழுந்து, தண்டவாளங்களில் வெட்ட வெளிச்சமான ஒளியடிக்க, தண்டவாளங்களைத் தாண்டி சாமிநாயக்கர் வந்து கொண்டிருந்தார். பல்லுப்போன பொக்கை வாயில் கிஹி கிஹி கிஹி என்று சிரித்தார். சாமித்தாத்தாவைச் சுற்றி ஒரே கூட்டம். சாமித் தாத்தாவோடு சேர்ந்து நகர்ந்தது. வெங்கிடு டீக்கடைக்குள் பாத்திரங் கள் அலறி உருண்டன. சாமிநாயக்கர் பெஞ்சியில் உட்கார்ந்தார். கைத்தடி நழுவி விழும் சத்தம். மெதுவாக இடுப்பிலிருந்த கோழி ரோமத்தை எடுத்து இறகை வகுந்து ஒட்டடைக் கம்பாக நீட்டி காதுக்குள் கொடுத்துக் குடைந்தார். கூட்டம் உசாராய்ப் பார்த்தது. கழுத்தைச் சாய்த்து மேல்காதை குடைந்து கொண்டே சுகத்தில் ஆழ்ந்த நிலையில் வாயைக் கோணிக் கொண்டு எல்லாரையும் பார்த்தார். மர்மப்புன்னகை கன்னச் சுருக்கங்களில் நெளிய ஒளி மிகுந்த கண்களால் எல்லாரையும் நோட்டம் பார்த்தார் சாமிநாயக்கர். கல்லாப்பெட்டியிலிருந்து தலையை நீட்டி தொந்திவயிறு குலுங்கக் குலுங்க வெங்கிடு சிரித்தார். ஒய். சாவன்னா. எல்லாரையும் பயித்தியாரன் ஆக்கிட்டீரே. ஒய். நல்லாச் செஞ்சீரு.... நல்லாச் செஞ்சீரு. சாவன்னா ஒமக்கு ஆயிசு நூறு எரநூறு சாவன்னா... ஒரே சிரிப்பாணிக் கூத்து. டீக்கடை சிரித்து உருண்டது. கூப்பாடுகளை எல்லாம் காதில் வாங்காதவர்போல் முகபாவத்தை மறைத்துக் கொண்டு ரொம்ப அக்கறையாய்க் காதைக் குடைந்து கொண்டிருந்தார் சாமிநாயக்கர். கடையில் தலைகீழாகத் தொங்கிய வாழைப்பழத்தார்கள் அசைந்தன. வேடிக்கை. ஒரே வேடிக்கை. பொறுக்கப் பொறுக்க வேடிக்கை பார்த்தது கூட்டம். சாவன்னாமுகம் சுண்டிச்சுருங்கியது. திடுதிப்பென்று முகபாவம் உணர்ச்சி பொங்கிச்சிரித்தது. விழுந்து விழுந்து சிரித்தார் சாமிநாயக்கர். 'சாமிநாயக்கனுக்கு சாவு ஏது. என்ன என்ன நடக்கு... இன்னும் சாமிநாயக்கன் பாக்க வேண்டியது நெறய்யா இருக்கு பேரப்புள்ள... 34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/35&oldid=839010" இலிருந்து மீள்விக்கப்பட்டது