பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

செம்மொழிப் புதையல்


கருத்தில் அச்சந்தோன்றி ஒரு புடைவருத்தினும், பண்டங்களின் சுவையும் மணமும் அதனை வெளியேகவிடாது ஒருபுடைத் தகைந்தன. தகையவே, தேனியும் நறுமணப்பண்டங்கள் வைத்துள்ள தட்டொன்றின் புறத்தேதங்கி, அவற்றின் மணத்தை நுகர்ந்தும் சுவையைத் தேர்ந்தும் சிறிதுபோது கழித்து நிற்க, "ஆ! இதோ பார். தேனீ! தேனீ!" எனக்கூறிக்கொண்டே சிறுவர் இருவர் அதனருகேவந்தனர். இச்சொற்களைக் கேட்ட அவ்வியும், உடனே அச்சத்தால் உடல் நடுங்க வெளிச்செல்வான் முயன்று ஒருசாளரத்தின் மேற்பாய்ந்தது. பாவம்! அதன் கதவு கண்ணாடியாலாயதாகலின், அக்களிவண்டு அதனையுணரவியலாது மயங்கி, ஆடியில் மோதுண்டு கலங்கிக் கீழேவீழ்ந்து, பின்னர்ச் சிறிது தேறி, சாளரச்சட்டத்தின் கீழ்ப்புறத்தே தான் மயக்கத்தாலும் அச்சத்தாலும் இழந்த மனவமைதியும் வன்மையையும் மீட்டும் பெறற்பொருட்டு விழுந்து கிடந்தது.

நிற்க, இதனைக்கண்ட சிறுவர்களிருவரும் அருகேபோந்து, இதைப்பற்றிய ஒரு சொல்லாடல் நிகழ்த்துவாராயினர்.

சிறுவன் :-தங்காய்! இதுதான் தேனி. இதனைத் தொழில்புரி தேனி என்பதும் வழக்கு. இதன் இருதுடைகளுக்கு மிடையிலுள்ள மெழுக்குப் பையினையும் காண். ஆ! என்ன ஊக்கமும் உழைப்பு முடையது இது தெரியுமா!

சிறுமி :- அண்ணால் மெழுக்கையும் தேனையும் ஆக்குவது -

இத்தேனி தானோ?

சிறுவன் :-ஆம். பூக்களின் உள்ளிருக்கும் இனியதேனை இது அவற்றின் உட்சென்று கொணர்கிறது. முன்னொரு நாள் நாம் நம்பூம்புதரின் அகத்தும் புறத்தும் "கம் கம்" என எண்ணிறந்த ஈக்கள் மொய்த்து இசைத்தது கண்டோ மன்றோ அவை அங்குமிங்கும் பறந்து திரிந்ததைக் கண்டு நகைத்தோமல்லவா? இளந்தளிர்களின் மீது இவை படருங் காலத்து இவற்றின் மெய்யழகு நம் உள்ளமெல்லாம் கொள்ளை கொள்ளவில்லையா? நிற்க, இது இன்று காலையில் தேனிட்டுங் காலத்தும் யான் பார்த்ததுண்டு. இதற்குத் தேனிட்டலொன்று தான் தொழிலெனல் ஆகாது.