பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

37


ஆகியவற்றுள் எதுவாயினும் அது பற்றிய செய்திகளையும் கருத்துகளையும் வரையறுத்து, வகைப்படுத்தி, முன்பின் முரணாது - காரணகாரியத் தொடர்பமைய நிரல்படத் தொகுத்து, பொருத்தமான மேற்கோள்களோடு வருத்தமின்றி விளக்கி, அவையோர் 'அருமை' 'அருமை’ என்று பெருமை பேசுமாறு உரையாற்றும் திறமை பிள்ளையவர்களின் தனியுரிமையாகும். சமயச் சொற்பொழிவுகளில் அவருடைய சிந்தனைத் தெளிவையும், சாத்திரத் தேர்ச்சியையும் காணலாம். இலக்கணச் சொற்பொழிவுகளில் நுண்மாண்துழைபுலத்தையும் ஆய்வுத் திறனையும் அறியலாம். இலக்கியச் சொற்பொழிவுகளில் ஆழ்ந்தகன்ற நூலறிவையும், நயம் கண்டு சுவைக்கும் பண்பு நலத்தையும் உணர்ந்து இன்புறலாம். இலக்கியங்களும் சிறப்பாகக் கம்பராமாயணப் பகுதிகள் பற்றிக் கற்றோர் இதயம் களிக்குமாறு உரையாற்றுவதால் பிள்ளையவர்களுக்கு இணை பிள்ளையவர்களே. பேச எடுத்துக்கொண்ட பகுதியை நாடகக் காட்சியாக அமைத்து, அதற்குரிய பாத்திரங்களை அவையோர் மன அரங்கிலே மாறி மாறி வந்து நடிக்கச் செய்து அவர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தும் அற்புத ஆற்றலைப் பிள்ளையவர்கள் பாலன்றிப் பிறரிடம் காண்பதரிது. ‘கால் பணத்திலே கல்யாணம், அதிலே கொஞ்சம் வாணவேடிக்கை’ என்னும் பீடிகையோடு அவர் கம்பனின் சொற் சுருக்கத்தையும் கவிநயத்தையும் எடுத்துக்காட்டி விளக்கி அவையோரைச் சுவைக்கச் செய்வார். அவர் பேசச் செல்வதற்கு முன் பேச்சுக்குரிய பொருள் பற்றிச் சிந்தித்துச் சிறு குறிப்பு ஒன்றை வரைந்து கொள்வது வழக்கம். அக்குறிப்பை உரை நிகழ்த்தும் இடத்திற்குக் கொண்டு செல்லமாட்டார். ஆனால், அங்கு நிகழ்த்தும் உரை முற்றிலும் அக்குறிப்பை ஒட்டியே அமைந்திருக்கும். இது கொண்டு இவருடைய சிந்தனைத் தெளிவையும், நினை வாற்றலையும் தெரிந்து கொள்ளலாம்.

மாணவர்களிடம் அன்பு

பிள்ளையவர்கள் மானவர்களிடம் பேரன்பு கொண்டவர். இவர் மாணவர்களை 'ஐயா, ஐயா' என்ற அக மகிழ்ச்சியோடு அன்பொழுக அழைக்கும் இன்ப ஒலி இன்றும் என் செவிகளில் இனிது ஒலித்துக் கொண்டிருக்கிறது. தம்மிடம் பயிலும் மாணவர்கள் சிறப்பாகத் தேறிச் சீராக வாழ வேண்டும் என்பதில்