பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

செம்மொழிப் புதையல்


அதனை ஒப்படைத்தனர். அப்போது அவர் வேறோரிடத்தில் மிக்க வருவாயுள்ள தொழிலில் ஈடுபட்டிருந்தார், ஆயினும் அவர் அதனைத்துறந்து விட்டு இந்த வணிக நிலையத்தை ஏற்று நடத்தும் பொறுப்பை மேற்கொண்டார்.

டெயிலர் (H.Teylor) முதல்வராய சிறிது காலம் அதன் நடைமுறைகளை நன்கு ஆராய்ந்தார். தொழிலாளிகளின் சொற்களையும் செயல்களையும் ஊன்றி நோக்கினார். விற்கப்படும் பொருள்களின் நலம் தீங்குகளை நன்றாகப் பார்வையிட்டார். வாணிகத்தின் மதிப்புக்கும் நாணயத்துக்கும் மாசு உண்டாக்கிய காரணங்களைக் கண்டார்; அதைப் போக்கும் துறையில் அவர் கருத்து ஆழ்ந்து நின்றது. முடிவில் அவர் மாசு துடைத்து மதிப்பை உயர்த்திப் பொதுமக்கள் மனத்தில் நம்பிக்கை உண்டுபண்ணுதற்கென்று ஒருசில "மந்திரங்களைக்" கண்டுபிடித்தார். அதைப் பின்பு ஒவ்வொரு தொழிலாளிக்கும் "உபதேசித்து" அதை மறவாமல் கைக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். தொழிலாளரின் மனத்தில் வேரூன்றிய "மந்திரம்", விரைவில் செயல்பட்டது. சிறிது காலத்திற்குள் அவரது வாணிக நிலையத்தின் புகழ் காட்டுத் தீப்போல எங்கும் பரவிற்று; வாணிகம் பெருகிற்று, ஊதியம் மிகுந்தது; விழும் நிலையிலிருந்த நிலையம் 200000 டாலர் வருவாயுள்ள பெரு வாணிகமாய் இன்று பிறங்கியுளது. மக்கள் அனைவருக்கும் அதன்பால் மிக்க நம்பிக்கையும் நன்மதிப்பும் உண்டாகவே, இப்போது யாவரும் பாராட்டும் பெருமை பெற்று விளங்குகிறது.

அப்படியானால் அந்த "மந்திரம்" யாது என அறிய வேண்டுமன்றோ? அதனை அவர் ரோட்டரி யென்னும் சுழல்கழகத்தின் வாயிலாக உலக மக்கள் அறிந்து பயன்புடுமாறு விளக்கமாகத் தெரிவித்துள்ளார்.

1. யாரேனும் தமது வாணிக நிலையத்துக்கோ கடைக்கோ வந்து ஏதேனும் ஒரு பொருளைக் கேட்டால், அப்பொருள் இருக்குமானால், அதை ஆராய்ந்து, "இது உண்மையான பொருள் தானா?” என்று முதலில் பார்க்க வேண்டும். இது தான் முதல் மந்திரம், போலியாகவோ மோசமானதாகவோ அந்தப் பொருள் இருக்கக் கூடாது. உண்மையானதாக இருந்தால்தான் கொடுக்க வேண்டும்.