பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

187



நமதுநாட்டு வணிகர் சொல்லும் சொற்களில நம்பிக்கை இல்லாது போனபடியாலும், அவர்கள் விற்கும் பொருள்களில் வஞ்சனையும் மோசமும் கலந்துள்ளமையாலும், வாங்கும் பொதுமக்கள் எந்தக் கடைக்குச் சென்றாலும், கடைக்காரர் சொல்லும் விலையைக் குறைத்துக் கேட்கும் (பேரம் பேசும்) வழக்கமும், அவர்தரும் பொருளின் தன்மையிலும் அளவிலும் ஐயப்படும் வழக்கமும் இயல்பாய் உள்ளன. இதனால் நமது நாட்டின் பெயரும் மதிப்பும் கெடுவது கண்டே நமது அரசியலார் வெளிநாடு செல்லும் நமது நாட்டவர்க்குச் சில அறிவுரைகளை அச்சடித்துத் தருகின்றார்கள். அவற்றில் ஒன்று: “நீங்கள் வேறு நாடுகளில் கடைக்குச் சென்றால், வாங்கவிரும்பும் பொருளுக்கு என்ன விலை சொல்லப்படுகிறதோ, அதை அப்படியே கொடுத்து விட வேண்டும்; பேரம் பேசக்கூடாது’ என்பது. சென்ற சில ஆண்டுகட்குமுன் நமது தென்னாட்டிலிருந்து அமெரிக்க நாட்டிற்குச் சென்றிருந்த ஒருவர், ஒரு கடையில் ஒரு பொருளின் விலையைக் கடைக்காரர் சொன்ன விலைக்குக் குறைவாகக் கேட்டாரென்பதற்காக அக்கடை முதல்வர் அவர்மேல் “மானநட்ட வழக்குத் தொடுத்த" செய்தி நாடறிந்த தொன்று. அதனால் நமது நாட்டு வாணிகத்தின் மானம் “கப்பலேறி விட்டது." இப்படியே மிளகுப் பொதியில் வேறு பொருள் கலந்தும், புளியில் மண்ணைக் கலந்தும் நமது நாட்டு வாணிகம் நமது நாட்டின் புகழுக்கும் பெருமைக்கும் பொல்லாத பழியும் வசையும் கொண்டுவந்ததைச் செய்தித்தாள்கள் தெரிவித்துள்ளன.

வட அமெரிக்காவில் இல்லினாய்ஸ் என்பது ஒரு மாகாணம்; அங்கே சிகாகோ என்றொரு பெரிய நகரம் உள்ளது. அந்நகரத்தில் ஒரு வாணிக நிலையம் சிறப்புடன் தொடங்கி வாணிகம் புரிந்து வந்தது. பல செல்வர்கள் அதற்குப் பங்காளிகளாக இருந்தனர். சில ஆண்டுகட்குப் பின் அதன் வாணிகத்தில் ஏதோ ஒரு குறையுண்டாக, அவ்வாணிக நிலையம் பெரு நட்டத்துக்கு உள்ளாகி வீழ்ச்சியடையத் தொடங்கிற்று. பங்காளிகளுக்கு மனவேதனை மிகுந்தது. “முதலிலார்க்கு ஊதியம் இல்லை என்றாற்போல முதலுக்கே கேடு தோன்றத் தலைப்பட்டது. அப்போது அதன் பங்காளிகளில் ஒருவரான ஹெர்பார்ட் டெயிலர் (Herbart Teylor) என்பவர் தலைமையில்