பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19. இந்திய நாட்டில் இசுலாம் செய்த இனிய தொண்டு


நாம் வாழும் இவ்வினியநாடு இந்திய நாடு என்பதில் நமக்கு இன்பம் எழுகின்றது. இதன்கண் வாழும் நாம் அனைவரும் இந்தியர் என்று எண்ணும்போது, நம் உள்ளத்தில் இன்பக் கிளர்ச்சி எழும்பியரும்புகிறது. நமது சமயம், வாழ்க்கை முறை, ஒழுக்கம் என்பனவற்றை நினைந்து எழுதும்போது நம்மையறியாத உவகை கனிந்து ஊறுகிறது. இத்துணைச் சிறப்புக்கு முதலிடமாய், நாம் இருந்து வாழ்தற்குத் தாயகமாய் விளங்கும் நம் இந்திய நாடு ஒருவகையில் வருத்தத்தையும் நல்குகின்றது, நம் கூட்டத்தில் சமயக் காய்ச்சல், வகுப்புப் பூசல், உயர்வு தாழ்வு, தீண்டுதல் தீண்டாமை முதலிய தீக்கோள்கள் நின்று நாம் பெறும் வாழ்க்கை யின்பத்தைச் சிதைக்கின்றன. பிற சமயங்களும், பிறசமயத்தவர்களும் செய்துள்ள நன்மை களைக் காய்தல், உவத்தல் இன்றி நடுநிலையில்நின்று காண வொட்டாது, இவைகள் மறைக்கின்றன; மறைத்தனவர் என்பதைப் பற்றி இனி நினைப்பது பயனில் செய்கையாகும், மறைக்காதிருக்குமாறு செய்தலே செய்யற்பாலதாகும்.

நல்லதன் நலனும் தீயதன் தீமையும் காண்பதே நம் அறிவின் கடமையாகும். உயரிய பொன் மிகத்தாழ்ந்த மண்ணொடு கலந்து காணபபடுகிறதன்றோ? மிகவுயர்ந்த பாலும் ஒரோ வழித் தீமைபயக்கக் காண்கின்றோமல்லமோ? நன்பொருள் இழிந்தோரிடத்தும், இழிபொருள் உயர்ந்தோரிடத்தும் பெறுகின்றோம்; கெடுபொருள் நண்பர் வாயிலும், நன் பொருள் பகைவர்பாலும் கிடைக்கின்றனவே! இவற்றையுட்கொண்டு, நம் திருவள்ளுவப் பெருந்தகை, "எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என மொழிந்தது பொய்யா மொழியன்றோ! இவ்வுண்மையைக் கற்பதும், பிறர்க்குக் கற்பிப்பதும் செய்யும் நாம், பிற சமயத்தவர் செய்த நலங்களையறிந்து பாராட்டுவது