பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

பஞ்ச தந்திரக் கதைகள்

எலி வளையின் உள்ளேயிருந்தபடியே, 'நீ யார்? ஏன் என்னை அழைத்தாய்?’ என்று கேட்டது.

'நான் ஒரு புறாவரசனின் பின்னால் வந்தேன். உன்னுடைய பெருந்தன்மையையும், நற்குணத்தையும், நட்புத் திறத்தையும், மரியாதைப் பண்பையும் பாசவுறவையும் கண்டு மனம் வசப்பட்டேன். நானும் உன் நண்பனாக இருக்க விரும்புகிறேன், அதற்காகவே அழைத்தேன்’ என்று காகம் கூறியது.

அதற்கு அந்த அறிவுமிகுந்த எலி, 'நானோ உன்னால் தின்னப்படும் இரைகளில் ஒன்றாயுள்ளவன். நீயோ என்னைப் போன்ற எலிகளைக் கொன்று தின்னும் இனத்தைச் சேர்ந்தவன். நானும் நீயும் நட்பாய் இருப்பது எனக்குப் பேராபத்தாய் முடியுமே யல்லாமல் வேறல்ல. நரியோடு நட்புக் கொண்டாடிய மான், வலையில் சிக்கிக் கொண்டது போல், எனக்குத் தீங்கு வரக் கூடும், ஆகையால் உன்னுடன் நண்பனாயிருக்க நான் விரும்பவில்லை’ என்று பதில் சொல்லிவிட்டது.

அதைக் கேட்ட காகம், மனங்கரையும்படியாக இவ்வாறு கூறியது:

'ஐயோ! எலியே, நீ என்ன சொல்லி விட்டாய். என் குணம் தெரியாமல் இவ்வாறு பேசி விட்டாய். உன்னைக் கொன்று தின்றால் ஒரு வேளைப் பசிகூட எனக்குத் தீராதே. ஆனால், நட்பாக இருந்தால் எத்தனையோ காலம் நாம் நன்றாக வாழலாமே!