பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

83


வெயிலவனை விளித்துக் கேண்மின். அவன் சேறுமிடனும் அப் பெறலரும் உலகே! குறித்த நாள் வருங்கால் நாம் அனைவரும் ஆண்டுப் படர்குவம்" என முடித்தது.

இவ் விசைவயப்பட்டு மனந்திருந்திய அத்தலைக்குஞ்சு, “அன்னாய்! அன்னாய்! நீ கூறுவது வாய்மைகொல்லோ யான் கொள்ளுமாறு யாது? அவ் வுலகம் உறுமிடம் யாண்டையது? அருள் செய்க," எனக் கசிந்தழுது, தன் தாய்முக நோக்கி, தனக்கு அம் மடப்புறவங் கூறிய அனைத்தும் முறையும் பொருளும் வழாது விளம்பிற்று. விளம்புங்காறும் அமைதிகொண்டேற்ற அச் செம்புள், “அருமந்த செல்வமே! அலமரல் வேண்டா, யான் வேறோர் நல்லிசை யிசைப்பல் கேட்டி" என்று தொடங்கித் தான் பண்டே யகன்ற உலகியலைப்பற்றிக் கூறல் தொடங்கிற்று.

அங்ஙனம், அவ்விடத்தினின்றும் அது அகன்றஞான்று, தான் ஏன் அகறல் வேண்டுமென்று நினைத்ததுண்டோ எனின் இன்று; செல்லுமிடம் இற்றென அறியாமே, பணிவும், உறுதிநோக்கும், நீங்குத னலத்திற்கெனும் திண்ணிய வெண்ணமும் ஆய இவையே அதன் உளப்பொருளா யமைந்திருந்தன. பெருங்கடலுலகிற் பிரிந்து வருநாள், அச் செலவுக்குரிய காரணப் பொருளை யுணர்த்துவாரேனும், “இஃதன்று, அது நின் நெறி" எனக் கூறுவாரேனும், அது கண்டதுண்டோ வெனின், அன்று. அஞ்ஞான்று, அம் மடப்புறவம் கண்டிருத்தல் கூடுமாயின், அது தானும் இவ்வாறு கூறற்பாலதாமோ? இவை யனைத்தும் ஆராயாது போந்த அச் செம்புள் தானும் பின்னர் உரிய நலத்தைத் துய்க்கா தொழிந்ததோ? அதனை யங்ஙனம் சேறல் செய்யுமாறு ஊக்கிய பொருளாய உள்ளொலி யாதாம்? அதுவே திருவருள் என்பது. அப்பறவை, அக் கான்யாற் றடைகரை யடைந்த நாளே உண்மையை ஒருவாறுணர்ந்தது. ஏனெனின், ஆண்டுத் தான் அது சின்னாள்வரைத் தங்குதல் விழைந்தது. பின்னரே, அதன் காதற் றுணைப்பறவை போதந்ததும், வாழ்க்கையின்பம் நுகர்ந்ததும் பிறவும் நிகழ்ந்தன. அன்பர்களே! அது போது, காதற் சேவலொடு கலந்து அது குடம்பை யமைக்கும்போது, தன்வயிற் பின்னர்த் தோன்றுவனவாய பார்ப்புக்கட்கென அக் குடம்பையைச் சமைக்கும் ப்ோது, அம் மடப்புறவங் கண்டிருக்குமேல்,