பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

63


உறுதிபெற்றவனாகின்றான். உயிர் வாழ்க்கையின் உறுதிப்பயன் அவன் பாலேயுளது. உயர்வு வேண்டுவோன் உழைப்பு வேண்டுக. கருவரைவீழ் அருவிகளும் கான்யாறும் கைகலந்து கலித்தோடுகின்றன. இடைப்பட்ட மாண்பொருளை வரன்றி யேகும் உழைப்பு வன்மையால் அவை கலித்துச் செருக்குகின்றன. அழுக்கும், மாசும், குப்பையும், கூளமும் அவற்றின் நெறியிற் பட்டு அலைத்துக் கொண்டேகப்படுகின்றன. கால் காலாய் வயலிடைப்படிந்து உரமாகித் தாம் பரவும் நிலப் பரப்பைப் பசும் புல்லும், நறுமலரும் கண்கவர் வனப்புமுடைய வண்பொழிலாக்கும் சிற்றாறுகளின் மாண்டொழிலை என்னென்பது! அவற்றின் தெண்ணீர் உண்ணீராகிறது. அது சுமந்து கொணர்ந்த அழுக்குகளும் அவற்றோரன்ன மாசுகளும் மாய்ந்து போகின்றன. இதனாலன்றோ, "உணவெனப் படுவது நிலத்தொடு நீரே; நீரும் நிலனும் புணரியோர், ஈண்டு, உடம்பும் உயிரும் படைத்திசி னோரே" எனக் குடபுலவியனாரும் பாண்டியன் நெடுஞ்செழியற்குப் பாடியறிவுறுத்தினார். இத்தகைய நீர் யாறே உழைப்பெனவறிக.

பல திறமாய், பல்வகைப் பொருள்களையாக்கி, நாடுகளை நாடா வளமுடையவாகச் செய்து, மக்களை இன்பமும், பொருளும், அறமும், வீடும் இனிது எய்துவித்து, அவர்தம் வாழ்க்கையின் பெரும்பயனை நுகர்விப்பது உழைப்பேயாகும். ஆகவே, உழைப்பே உயிர் என அறிகின்றோம். உயிர் உடலோடு கூடி வாழ்க்கை நடத்துந்தோறும், அதன்பால் பேரின்பம் பெறுதல்போல, உழைப்பாளியும் உழைக்குந்தோறும் உவட்டாத பேரின்பமும் ஊக்க மிகுதியும் பெறுகின்றான். ஆண்டவன் திருவருள் அவன் உள்ளத்தே ஊறுகிறது. உயர் நோக்கும், ஒள்ளறிவும், பெருந் தன்மையும் அவன்பால் உளவாகி யோங்குகின்றன.

நோன்மை, துணிவு, முயற்சி, அறிவுப் பேற்றின்கண் ஆர்வம், தன்குற்றம் தேர்ந்து கடிதல் முதலியன இன்ப வாழ்வுக்கு ஆக்கமாகும் நல்லறங்கள். உணர்த்த உணர்வதிலும், இவற்றை நாமே நம் உழைப்புவாயிலாக உணர்ந்து நன்னெறிகளிற் செலுத்துவதே நம் உயிர் வாழ்க்கையாகும். உழைப்பு வாயிலாக இவற்றை நாம் உணர்தல் வேண்டும். நோன்மை என்பது எத்துணை இடுக்கண்கள் அடுக்கிவரினும்,அவற்றிற்கு அழியாது,