பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

145


பிறிதாகுவதாயின், மறக்கு வென்கொல் என்காதலன் எனவே" (நற்) "இம்மை மாறி மறுமையாயினும், நீயாகிய ரெங்கணவனை, யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே" (குறுந்) “இம்மை யுலகத்திசையொடும் விளங்கின மறுமை யுலகமும் மறுவின் றெய்துப" (அகம்) என மறுபிறப்புணர்வும் "வாராவுலகம் புகுதலொன்றெனப் படை தொட்டனனே குரிசில்" (புறம்), "தொய்யா வுலகத்து நுகர்ச்சியும் கூடும்" (புறம்) என மேலுலக வுணர்வும் சங்கச் சான்றோர்களால் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். இவ்வாறே மிகப் பழைய தமிழ் நூலாகிய தொல்காப்பியத்தும் இம்மூவகையுணர்வும் குறிக்கப்பெறுகின்றன. வடநூல்களிலும் வேதங்கள் தவிர ஏனை எல்லா நூல்களிலும் இவை கூறப்படுகின்றன. உலகாயதம் ஒழிந்த ஏனையச் சமயங்கள் யாவும் இவற்றை மேற் கொண்டுள்ளன. ஆதி வைதிகம் ஒழிந்த இந்திய சமயங்கள் பலவற்றிற்கும் வினையுணர்வு அடிப்படை எனத் தெளிய உணர வேண்டும்.

வினை யென்பது யாது? மனம், வாய், உடம்பு என்ற கருவிகளின் இயக்கமும் இயக்கமில்லாமையும் வினையென்று கூறப்படும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் வினையாகும். உலகில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பயன் உண்டு. இராசராசன் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டினான் என்றால் கட்டுதல் வினையும், பெரிய கோயில் செயப்படு பொருளுமாகும். அதனால் அவன் அடைந்த பயன் இன்பமாம். இப்படியே ஒவ்வொரு வினைக்கும் செயப்ப்டு பொருளும் பயனும் உண்டு. தொடக்கத்தில் சமய நூல்கள், செய்கையை வினையென்றும், செயப்படுபொருளைக் கன்மம் என்றும் கூறின. ஒரு செயல் செயப்பட்டபோதேயன்றிச் செயப்படாத போதும் வினையெனவே நின்றதனால் பின்வந்த சமய அறிஞர்கள், செய்யப்படும்போதும் படாதபோதும் செயப்படுபொருள் உள்ளடங்கியிருப்பது கண்டு, செயலையும் செயப்படு பொருளையும் ஒருங்கு கூட்டி வினையெனவும், கன்மமெனவும், இன்பமும் துன்பமுமாகிய பயன்களை வினைப்பயன் என்றும், கன்ம பலன் என்றும் வழங்கினர்.

ஒருவினை செயப்படுங்கால் அதனால் விளையும் பயனும் உருவர்கிறது. அவ்வினை செயப்பட்டதும் பயனும் உருவாகி செ-10