பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

185


வணிகரிடையே பொய்யும் வஞ்சனையும் மோசமும் இயற்கைப் பண்பாக அமைந்துவிட்டன.

நமது நாட்டுப் பாராளுமன்றத்தில் ஒரு முறை நமது நாட்டு வாணிகத்தைப் பற்றிப் பேச்சுவந்தபோது வணிகத்துறை அமைச்சர் எழுந்து நின்று நம்நாட்டு வணிகரிடம் உள்ளதென ஒரு பெருங்குறையை எடுத்துக் கூறினார். நம் நாட்டு வணிகர் தாம் விற்கும் பண்டங்களில் மோசமும் வஞ்சனையும் செய்கிறார்கள்; அதனால் வெளிநாட்டவர்க்கு நம்பிக்கை குறைந்துவிட்டது என்று வருந்திக் கூறினார். வெளிநாட்டு மக்கள் இகழ்ந்து வெறுத்துத் தள்ளக்கூடிய அளவு பண்டங்களில் மோசம் செய்யப்படுகிற தென்றால், உள்நாட்டு வாணிகத்தில் நடக்கும் வஞ்சனைக்கு அளவு சொல்ல முடியுமா?

மக்களுக்குத் தேவையான பொருள்களுள் அரிசி, பருப்பு, புளி, மிளகு, மிளகாய்ப்பொடி முதலியன மிகவும் சிறந்தவை. நமது நாட்டுக் கடைத்தெருவில் விற்கப்படும் அரிசி முதலியவைகளை ஆராய்ந்தால் கல்லும் மணலும் கலவாத அரிசியும், பருப்பும் கிடையாது. புளியில் களிமண்ணையும், மிளகில் வேறு விதைகளையும் மிளகாய்ப் பொடியில் செங்கற் பொடியையும் கலந்துவிடுகிறார்கள். நல்லெண்ணெயில் வேறு எண்ணெய்களைக் கலப்பதும், சீனியில் மணலைக் கலப்பதும், பாலில் நீரையும் வெண்ணெயில் மெழுகையும், கலப்பதும் இயல்பாகவுள்ளன. துணிக்கடையில் நடக்கும் மோசங்களுக்கு எல்லையில்லை. எட்டு கசம் துணி வாங்கினால் அது மீள அளக்கும்போது ஏழரைகசத்துக்கு மிகுவதில்லை; எழு கசச் சீலையென்பான் அளந்தால் அது ஆறரைகசமே யிருக்கும்; ஆறு முழம் வேட்டி யென்பதை அளந்தால் அது ஐந்தரை முழந்தான் இருக்கும். இவற்றை நாடோறும் காண்பதால் மக்கள் மனத்தில் வாணிகம் என்பது சூதும் வஞ்சனையும் கலந்ததொழில் என்ற கருத்து வேரூன்றிவிட்டது. மக்களில் பெரும்பாலோர் போதிய கல்வியறிவில்லாதவர்களாதலால் வாணிகத்திற்கு இந்த இழிநிலை இயல்பாய்ப் போய்விட்டது; இந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களும் இவர்களில் தீங்கு என்று நினைக்கவோ, இத்தீங்கை ஒழித்துக்கட்டுவதற்கேற்ற நடவடிக்கை மேற்கொள்ளவோ முன்வரவில்லை. உள்நாட்டில்