பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

செம்மொழிப் புதையல்


ஊர்கள் சதுர்வேதி மங்கலங்களாக மாறி, பின்னர் அனைத்தும் மறைந்த வரலாற்றோடு ஒத்த தனி வரலாறு ஆகும்.

இப் பரிமேலழகர் திருக்குறட்கு எழுதியுள்ள உரை மிகவும் சிறந்ததெனத் தமிழறிஞர் அனைவரும் ஒரு முகமாகப் பாராட்டுகின்றார்கள். பரிமேலழகருக்கு முன்னும் பின்னும் தமிழ்ப் புலவர்கள் தோன்றித் திருக்குறட்கு உரை கண்டாரேனும், பொது வகையில் நோக்கினால் பரிமேலழகர் உரைத்த உரைக்கு ஒப்பாகவோ, உயர்வாகவோ உரை எழுதினோர் இல்லை என்று கூறுவது மரபு. இதனை வற்புறுத்துவது போல், “பாவெல்லாம் நல்லாவின் பாலாமோ, பாரிலுள்ள நூலெல்லாம் வள்ளுவர் செய் நூலாமோ நூலில், பரித்தவுரை எல்லாம் பரிமேலழகன், தெரித்தவுரையாமோ தெளி” என்றொரு பழம் பாட்டு நாட்டில் நிலவுகிறது. அன்றியும், பரிமேலழகர் உரையைத் தழுவியும், ஒற்றியும் எழுதின உரைகளை அறிஞர்கள் மேற்கொண்டதோடு வேறுபட்டும் மாறுபட்டும் செய்த உரைகளை ஏலாது ஒழிந்தமையே ஒரு சான்றாகும்.

பழந்தமிழ் நூல்கட்கு உரை காண்பது. படிப்பிப்போர், நூல்களைப் பிறர் படித்துப் பொருள் விளங்கிக் கொள்ளுமாறு செய்யும் செயல்வகையில் ஒன்று, அருஞ் சொற்களுக்கும், சொற்றொடர்களுக்கும் பொருள் உரைத்தலும், அவற்றிற்குப் பொழிப்புரைத்தலும் ஒரு வகை. அவற்றுன் முதல் வகையை அரும் பதவுரை என்றும், கண்ணழித்துரை என்றும், பதவுரை என்றும், பின்னதைப் பொழிப்புரை என்றும் கூறுவர். - உரைக்கப்பட்ட உரையின்கண் அடங்கிய கருத்துக்களை வினா - விடை வாயிலாக விளக்கி நூலாசிரியர் உள்ளக்கிடையை அறிவாராய்ச்சி நெறியில் தெளிய உரைத்தலும் ஒரு வகை. இன்றுள்ள, தொல்காப்பியம் முதலிய இலக்கணங்கட்கும் இலக்கியங்கட்கும் உரைகாரர் தோன்றி, உரையெழுதியது சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு உள்ளேதான் என்று கூற வேண்டும். அதற்கு முன்னே நிலவிய உரைகளைப் பற்றி ஒன்றும் அறிய முடியவில்லை. எனினும், இறையனார் களவியலுக்கு நக்கீரர் கண்ட உரை பழமை வாய்ந்தது. அதனையும் தொல்காப்பியம், திருக்குறள் முதலிய நூல் உரைகளையும் ஒப்பவைத்து நோக்கும் போது உரைகாரர் வழி வழியாக மேற்கொண்டிருந்த மரபு ஒன்று வெளிப்படுகிறது. எடுத்தோத்து, இலேசு, உத்தி என்ற மூன்று