பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



எருதும் சிங்கமும்

13


“மோந்து பார்ப்பவர்கள் போல் வந்து, கடித்து விடக் கூடிய தன்மையுடையவர்கள் அரசர்கள். அரசர்களும், தீயும், பாம்பும் ஒரே மாதிரி தான்' என்று இரண்டாவது நரி கூறியது.

‘நெருங்கி வளர்ந்திருக்கும் கொடி, பக்கத்தில் இருக்கும் மரத்தின் மேலேதான் படரும். அதுபோல, பெண்களும், மன்னர்களும் அருகில் இருந்து இனிமையாகப் பேசுபவர்களிடமே அன்பு கொள்ளுவார்கள். நானும் என் திறமையால் சிங்கத்தின் நட்பைப் பெறுவேன்’ என்று உறுதியாகக் கூறியது முதல் நரி.

‘நன்று, நீ வெற்றியடைக!’ என்று இரண்டாவது நரியும் மனந்துணிந்து வாழ்த்துக் கூறியது.

முதல் நரி விடை பெற்றுக் கொண்டு சிங்கத்தின் முன்னே சென்று கை கூப்பி நின்றது.

'இந்த நாள் வரை உன்னைக் காணோமே, எங்கு போயிருந்தாய்?' என்று கேட்டது சிங்கம்.

‘அரசே, ஒன்றுமில்லாமல் வந்து என்ன பயன்? இப்போது தங்களிடம் வரவேண்டியகாரியம் ஏற்பட்ட தால் வந்தேன். என்னைச் சிறியவன் என்று எண்ணி ஒதுக்கிவிடாதீர்கள். உங்களுக்கு வெற்றியும் பெருமையும் உண்டாகும்படி செய்வேன். நல்ல அறிஞர்களின் துணை கொண்டே அரசர்கள் நீதிகளை இயற்றுவார்கள். அவர்களுடைய அரசும் பெருமையுடன் விளங்கும். ஒளி பொருந்திய வாளும், இனிமை