பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாலகுசம், மணிமேகலை, திலகவதி, தமிழரசி ஆகியோர் பிறந்து இன்றும் சிறந்து விளங்குகின்றனர். வடார்க்காடு மாவட்டத்தில் காவிரிப்பாக்கம், செங்கம், போளூர் முதலிய உயர்நிலைப் பள்ளிகளில் ஒளவை பணியாற்றினார். பின்னர் திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரியில் விரிவுரையாளர் பொறுப்பை ஏற்றார். தொடக்கத்தில் கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரியிலும் சில காலம் பணியாற்றினார்.

நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திடுமென மறைந்ததும் முன்னரே அவர் விரும்பிக் கேட்டது போல மணிமேகலையில் உள்ள சமயப் பகுதிகளுக்கும், தருக்கப் பகுதிகளுக்கும் நுண்ணிய நல்லுரை வரைந்து பெரும்புகழ்பெற்றார். இதற்காகப் பவுத்தசமய, வடமொழி நூல்களைக்கற்றுத் தெளிந்தார்.

உரை எழுதுவதில் சிறந்து விளங்கிய புலமைக்காக, இவரை ‘உரைவேந்தர்' எனத் தமிழுலகம் போற்றிப் புகழ்ந்தது. யசோதர காவியத்துக்கு இவர் வரைந்த உரை அறிஞர் பெருமக்களின் பாராட்டினைப் பெற்றது. ஒளவை துரைசாமியின் உரைத்திறத்தையும், தமிழ்ப்புலமையையும் கண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவரைத் தம் தமிழ்த் துறையில் இணைத்துக் கொண்டு மகிழ்ந்தது. அப்போது, சைவ இலக்கிய வரலாறு என்னும் அரிய நூலை இவர் தமிழுக்குப் புதிய வரவாக வழங்கினார். அதற்குப் பிறகு ஐங்குறுநூற்றுக்குப் பேருரை எழுதினார். ஞானாமிர்தம் எனும் சைவ சமய நூலுக்கும் விளக்கவுரை கண்டார்.

உரை வளம் வழங்குவதில் வல்லவரான ஒளவை துரைசாமி, தமிழே வாழ்வெனக் கொண்டு, அது குறித்தே சிந்திப்பதும், செயலாற்றுவதுமாகத் தம் வாழ்நாளை இனிதே கழித்தார். இவர் தமிழ்ப் பணிக்கு மாணிக்க மகுடமாகப் புறநானூற்றுக்கு இவர் வரைந்த ஒப்பற்ற உரை மிளிர்ந்தது. பிறகு நற்றிணைக்கு நல்லுரை கண்டார். பதிற்றுப்பத்துக்குப் பாங்கான உரையும் கண்டார். இவர் பொன்னுரைகள் தமிழுலகத்திற்குப் பெருமை சேர்த்தன. அதன் அருமை உணர்ந்து தமிழுலகம் உரைவேந்தரை உச்சிமேல் வைத்துப் பாராட்டியது. சிலம்பு, மேகலை, சிந்தாமணி ஆகிய முப்பெருங் காவிய ஆராய்ச்சிகளை முதலில் எழுதிய பெருமையும் இவரைச் சாரும்.

நாளும் நற்றமிழ் வளர்த்து, தமிழ்த் தொண்டிலேயே திளைத்திருந்த இவரை, மதுரை தியாகராசர் கல்லூரி, தமிழ்ப் பேராசிரியராகச் சேர்த்துக்

6