பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

செம்மொழிப் புதையல்


உரைப்பாயிரத்திற்கு வியப்புறும் வகையில் விளக்கம் கூறியபின், கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ள ஒவ்வொரு குறளுக்கும் பரிமேலழகர் உரையையும் பிறர் உரைவிகற்பங்களையும் தமக்கே உரிய தனிமுறையில் தடைவிடைகளால் தெளிவாக விரித்து விளக்கி முடித்தார். அன்று முதல் நிழல்போல் அவரை நீங்காமல் உடனிருந்து, தொடர்ந்து ஐந்தாண்டுகள் அரிய இலக்கிய இலக்கணங்கள் பலவற்றையும் முறையாகப் பயின்று சென்னைப் பல்கலைக்கழக வித்துவான் தேர்வு எழுதி முதல் வகுப்பில் மாநிலத்தில் இரண்டாமவனாகத் தேறி, சென்னையில் உள்ள மிகப் பெரிய உயர்நிலைப் பள்ளியொன்றில் தலைமைத் தமிழாசிரியனாக அமர்ந்து, முப்பது ஆண்டுகட்குமேல் தொடர்ந்து பணி யாற்றினேன். இந்நிலைக்கு என்னை உருவாக்கி, வழிகாட்டி, வாழவைத்த வள்ளல் பிள்ளையவர்களேயெனின் அவர் பெருமைக்கு வேறு சான்று வேண்டுவதில்லை.

உழைப்பால் உயர்ந்தவர்

பிள்ளையவர்கள் உழைப்பின் உயர்வுக்கு எடுத்துக்காட்டு. அவர் வாழ்வு ஒயா உழைப்பினால் உருவானது, அவர் இன்றைக்கு எண்பதாண்டுகட்கு முன் தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள ஒளவையார் குப்பம் என்னும் சிற்றுரில் எளிய குடும்பம் ஒன்றில் தோன்றினார். இளமையில் பல வேறு இன்னல் இடையூறுகட்கிடையில் உழைத்துப் படித்து இண்டர்மீடியட்டில் முதலாண்டு மட்டும் பயிலத் தொடங்கி, தொடர்ந்து படிக்கக் குடும்ப நிலை இடந்தாராமையால் நகராண்மைக் கழகத்தில் நலத்துறைக் கண்காணி (Sanitary Inspector) யாக வாழ்வைத் தொடங்கினார். இயற்கையில் அறிவும், ஆற்றலும் சிறக்கப் பெற்ற இளைஞராகிய பிள்ளையின் வளமை கண்ட தமிழன்னை அவர்மீது தன் அருள் நோக்கைச் செலுத்தி அவரை ஆட்கொண்டாள். அவர் உள்ளத்தில் தமிழார்வம் ஊறிச் சுரக்கலுற்றது. அவர் நகராண்மைக் கழகப் பணியை விடுத்துக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை அடுத்து, நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், கவியரசு வேங்கடாசலம்பிள்ளை போன்ற பெரும் புலவர்களிடம் அருந்தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் திருந்தக் கற்றுத் திறமான புலமை பெற்றுச் சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் தேர்வில் சிறப்புறத்-