பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2.உழைப்பு




“வினையே ஆடவர்க் குயிரே வாணுதல்
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரென
நமக்குரைத் தோரும் தாமே
அழாஅல்தோழி அவர் அழுங்குவர் செலவே...”

-குறுந்தொகை:135

ற்குணமும் நற்செய்கையும் சிறந்த நங்கையொருத்தி, அறிவும் ஆண்மையும் பெருகிய தோன்றல் ஒருவனை மணந்து இல்லறம் பூண்டு வந்தனள். ஒருநாள் அவன், தான் செய்வதற்குரிய வினையொன்று குறித்துத் தன் மனையின் நீங்கிச் செல்லவேண்டியவனானான். மணந்தநாள் தொட்டுத் தன் கணவனைப் பிரிந்தறியாத அந்நங்கைக்கு இது தெரியின், அவள் பெருவருத்தம் எய்துவள் என்பதை அத்தோன்றல் எண்ணினன். உண்மைக் காதல்வழி யொழுகுவார்க்குப் பிரிவுபோலப் பெருந்துன்பம் தருவது பிறிது கிடையாது. "இன்னாது இனனில்லூர் வாழ்தல், அதனினும் இன்னாது இனியார்ப் பிரிவு" என்று திருவள்ளுவரும் கூறியுள்ளார். அதனால் தன் கருத்தினை, அவன், அவளது தோழிக்கு உரைத்து, பின்னர் மெல்லத் தன் மனையாட்குத் தெரிவிக்குமாறு பணித்தான். அவளும் அதற்கு ஒருவாறு உடன்பட்டு, காலம் வாய்த்த போது அவனது கருத்தினைப் பைய வுணர்த்தினாள். கேட்டாளோ இல்லையோ, நங்கைக்குப் பெருந்துயர் உண்டாகிவிட்டது; கண்ணீர் விட்டுக் கதறியழத் தொடங்கினாள். அவளை ஆற்றுவிக்கத் தொடங்கிய தோழி, "நங்காய், கணவன் சொல்லைக் காப்பது மனைவிக்குக் கடன். அவர் ஒருநாள் சொன்னது ஒன்றுண்டு. அது நினக்கும் தெரிந்ததே. அஃதாவது: 'ஆடவர்க்குத் தாங்கள் செய்யும் வினையே உயிர்; மனையுறையும் மகளிர்க்கு அவ்வாடவரே உயிர். அவர்க்கு உயிராகிய வினைமேற் சென்றால்தானே, அவர் நினக்கு உயிராக இருத்தல்கூடும்; நீ அழுதால் அவர்