பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

செம்மொழிப் புதையல்


தேன் உண்டனைகொல்லோ அன்றி அக்கொடிய பச்சிலைப்புழு நம் கூடுகளில் தன் முட்டையிட்டுளது பற்றிச் சினங் கொண்டனையோ? என்னைகாரணம்?’ என வினவிற்று. அதற்கு இது, “நீ கூறிய யாதேனும் வேண்டுங் காரணமாகாது. ஐயோ பாவம்! அவையென் செய்யும்? தாந்தாமுன் செய்தவினையைத் தாமே துய்ப்ப தல்லது பிறர் செய்வதென்?" எனவிடையிறுப்ப, அது, "பின்னர் என்னையோ காரணம். உரைத்தி" என மீட்டும் வினவ, இது கூறும்:- "இல்லை. அன்ப! இன்று காலையிற் சென்ற யான் மிக்க சேணிற் சென்றேன். சென்றவிடத்து யான், இதுகாறும் கேட்டறியாதனவெல்லாம் கேட்டேன். கேட்டவற்றின் கருப்பொருள் “நாமெல்லோரும் இழிதொழில்புரியும் இழித்தக்க உயிர்களாவோம் என்பதே.”

இவ்வுரை அதன் செவிப்படலும், அது திடுக்கிட்டு, "நீ இதுகாறும் அறியாத இதனை உனக்கு உணர்த்தியவர் யாவர்?” எனக் கேட்ப, இது சாலவெகுண்டு, உண்மையை யுணர்த்துபவர் யாவராயினுமென்! யான் இன்று அறிந்தது முற்றிலும் உண்மையே. இதுமட்டில் உறுதியே." என்றது.

எனவே, அது, “ஒரு காலும் நீ கூறியது உறுதியுடைத்தன்று. பேதைச்சிற்றுயிரொன்று இங்ஙனம் பிதற்றியதுகொண்டு, பிழைபட்டொழுகுதல் பெருந்தகைமையேயன்று. நீ இழித்தக்கோய் என உணர்வுணர்த்தினாரா லுரைக்கப்பட்ட அச்சிறு பொழுது காறும் நீ அப்பெற்றியை யல்லை யென்பதை நீயே நன்கறிவாய். ஆகவே, அவர் உரைத்தாரென நீ கூறும் உரை வெற்றுரையென்பதனினும் வெளிற்றுரையெனவே யான் கூறுவேன். இனி இதைப் பற்றிக் கூறுதலும் அறமாகாது." எனக் கூறிக்கொண்டே தான் முன்னர்க் குறைபடவிட்ட காரியத்தைச் செய்யத் தொடங்கிற்று. -

எனினும், இவ்வுரைமுழுவதும் செவிடன் காதில் ஊதப்பெற்ற திவவொலியே போலப் பயனின்றி யொழிந்தது. ஆனால், இதுமட்டில், தன்னொத்த ஈக்கள் பலவற்றை ஒருங்கழைத்துத் தான் தேன்றேடிச் சென்றவிடத் தறிந்தவை யனைத்தையும் தெளிவாகக் கூறிற்று. கேட்டவற்றுட் சில பெருவியப்பும், சில பெருங்கலக்கமுங் கொண்டன; முடிவில் அவ்வீக்குழாத்தி னிடையில் ஒரு பெருங்குழப்பம் உண்டாயிற்று.