பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

செம்மொழிப் புதையல்


எழுந்து அறிவை மயக்க, அருகிருந்த மலரொன்றிற்குச் சென்று மறைந்தது. ஆயினும் அம்முதிர்வண்டு, நடந்தனவற்றைக் குறிப்பாக வுணர்ந்தும், ஒன்றும் தெரியாததையொப்பக் கூர்த்த நோக்கத்தோடு, "என்கொல்! நீ ஏன் இங்கு வந்தனை? உனக்கு உற்ற தென்னை? நீ வந்திருப்பாய் என யான் ஒருகாலும் நினைத்ததின்றே! ஓ! உன் உழைவண்டுகள் யாண்டுள? அவற்றை நீ பிரிதற்கேய்ந்த காரணம் யாதோ? கூறுதி” என வினவிற்று.

இதைக்கேட்ட அக்களிவண்டு, பெரிதும் நாணி, "யான் அறியேன்; சோலையின் புறத்தே யான் அவற்றைப் பிரிந்து போந்தேன் ஆதலின்" என்றது.

மு. வண்டு:- அவை யாது செய்துகொண்டிருக்கின்றன?

க.வ :- க-லா-ய்-க்-கி-ன்-ற-ன-போ -லு-ம்

மு.வ :- (விரைந்து.) என்னோ காரணம்?

க.வ :- தாம் இனிச்செய்ய வேண்டுவனபற்றி.

மு.வ :- ஆ! என்ன அருந்தொழில் புரிதல் நேர்ந்தன! நன்று! இளவேனிற்காலத்து இனிய காலையில் மேற்கொள்ளப் பட்டதன்றோ இத்தொழில் நன்று! நன்று! செய்கறிய செய்வதன்றோ பெரியோரது தொழில்!

க.வ - :- எள்ளுதல் வேண்டாம் .ஏ! அன்னாய்!! இனியும் இன்னணம் இழித்துக்கூறற்க. என்னைப் பொறுத் தருள்க. இனி யான் செய்ய வேண்டியவற்றையும் பணித்தருள்க. ஒன்று மட்டில் கூறுகின்றேன்; யான் முன்னர்ச் சென்றிருந்த ஞான்று இயற்கையின் இயல்பையும், நம்மனோரின்றன்மையையும் பற்றிக் கேள்வியுற்ற உரை முற்றிலும் வாய்மையாகவே தோன்றிற்று; எனினும், நாம் அவ்வுரைவழி நிற்பான் முயலுங்காலத்து, வீணே கலாய்த்தலும் வெறுத்தலும் செய்தல் நேர்கின்றதேயன்றிப் பெரும் பயனொன்றும் பெறுமாறில்லை. என்னை?

மு.வா :- நிற்க, நின் வயதென்னை.

க.வ :- (இளமைத் தன்மையொடு நாண்மீக்கொள) ஏழு

நாட்களே.