பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

65


பிறரும் மண்ணள்ளி எறிந்த வண்ணமே இருந்தனர்; பொருளுதவி புரிவோர் இருளில் மறைந்தனர்; கிறிஸ்தபருக்கும் இடுக்கண் பல அடுக்கி வரலாயின. ஆயினும் என்? "மடுத்தவாயெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடுடைத்து" என்ற திருவள்ளுவப் பெருமொழிபோல, அவ்விடையூறுகளும் இடர்ப்பட்டுத் தாமே யழிந்தன. கதீட்ரல் கண்கவர் வனப்பும் மண்மகிழ் தோற்றமும் பெற்று இன்றும் நின்று நிலவும் பெருஞ் சிறப்புடன் திகழும் செம்மை யெய்திற்று. இன்றும் அதனைக் காண்போர், "பெரியார்" எனப் பொறித்துள்ள பெரும் பெயரைக் காணுந்தோறும், நம் கிறிஸ்தபரின் வினைத்திட்பம், முயற்சி முதலிய வினைமாண்புகளை நினைந்து பாராட்டாநிற்கின்றனர்.

திருவும் கல்வியும் சிறந்து விளங்கும் நாடுகளுள் இப்போது அமெரிக்க நாடு எத்துறையிலும் ஈடுமெடுப்புமின்றி விளங்குவதனை நாம் அறிகின்றோம். இதன் உண்மையினை யுணர்ந்து கண்டு உரைத்த கொலம்பஸ் என்னும் பெரியாரை மேனாட்டவர் அனைவரும், நம் நாட்டவருட் கற்றவரும் நன்கறிவர். நம் நாட்டிற்குப் புதுநெறி யொன்று காணப்புகுந்த அப்பெரியார் அவ்வமெரிக்க நாட்டினைக் கண்டறிந்தனரா யினும், அதனை முதலிற் காண்டற்கண் அவர் உற்ற இடுக்கண் உரைக்குந் தரமுடையதன்று. புதுநெறி காண்டல் கூடுமென்ற எண்ணம் அவர் உள்ளத்திற் புகுந்த நாள் முதல், புதுப்பெரு நாடாகிய அதனைத் தம் கண்களாற் காணுந் துணையும், அவரை, அவமதிப்பு, அச்சுறுத்தல், அறியாமை, இகழ்ச்சி, ஏமாற்றம், வசைவு, கொலை, அச்சம் முதலிய பல செயல்கள் பல்லாற்றாலும் அரித்து அலைத்தன. நாட்டின் காட்சியை யெய்துதற்கு இரண்டொரு நாழிகை யிருக்கும்போதும், அவர் சென்ற வங்கத்திலிருந்தோர் அவரைப் பற்றிக் கொலைசெய்துவிடவும் துணிந்தனர்: மலைபோல் அலையெழுந்து முழங்கும் மறிகடல், முன்னே கிடந்து, மருட்சி விளைவித்தது; பின்னே அவரது நாடு நெடுந்தொலைவிற் கிடந்து, வறிதே திரும்பின் அவரை இகழ்ந்தெள்ளி இன்னற் , படுத்தற்கு எதிர்நோக்கியிருந்தது; அருகில் சூழ விருந்தோர் மடித்தவாயும், வெடித்த சொல்லும், கடுத்த நோக்கும் உடையவராய்த் தீவினையே சூழ்ந்து கொண்டிருந்தனர். கணந்தோறும், நிலையின்றிப் புரளும் அலைகள் அவர்தம் கலத்தைச் செலவொட்டாது தடுத்தற் கெழுந்தன போல

செ-5