பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

செம்மொழிப் புதையல்


செல்வமும் எய்தற்குரிய நெறிமுறைகளை வகுத்தும் விரித்தும் கூறவில்லை. ஓரளவு நாட்டில் நிலவியிருந்த ஓவியம், இசை கைத்தொழில் வாணிபம் காட்டினவே யன்றி, அவற்றை யமைக்கும் நூல் வகைகள், செயல்முறைகள் முதலியவற்றை யறிதற்குத் துணை செய்யாவாயின. இக்குறை முற்காலத்து இலக்கியங்களில் சிறிதும் பிற்காலத் திலக்கியங்களில் பெரிதுமாகக் காணப்படுகிறது. இனிவரும் இலக்கியங்கள் ‘எல்லாரும் எல்லாச் செல்வமும்’ எய்துதற்கு வேண்டும் கருத்துக்களை விரிவாக எடுத்து வழங்க வேண்டும்,

வழிபாட்டுரிமைக் கேதுவாகிய சமய வுரிமை குறித்துத் தமிழிலக்கியங்கள் பெரும் பணி புரிந்துள்ளன. ஊர்தோறும் பெருங் கோயில்களும் அக்கோயில்கட்குப் பெரும் பொருளும் உண்டானதற்குச் சமய இலக்கியங்களின் பணியே காரணமென்பது வெளிப்படை. கோயில்களைப் பெரும் பொருள் நிலையங்களாகவும் கலை நிலையங்களாகவும் செய்தது சமய இலக்கியமே. அரசரது அரசியற் பயன் கோயில்கட்குச் செய்யும் திருப்பணியிலே ஒன்றி நின்றது. சைவத் திருமுறைகளும் ஆழ்வார்களின் பாசுரங்களும் கடவுட் கொள்கையை நிலை நாட்டிக் கடவுள் வழிபாட்டில் மக்கள் கருத்து மீதுர்ந்து செல்லுமாறு செய்தன. சமயச் சார்பாயெழுந்த புராணங்கள் மக்களது வழிபாட்டுரிமைக்குத் தீங்கு செய்தன. கோயில்களில் சாதி வேற்றுமை மொழி வேற்றுமைகளைப் புகுத்தின. ஆண்டு தோறும் நம் நாட்டுக் கோயில்கட்கு இரண்டு கோடி ரூபாய் வருமானமாகும். மக்கள் தரும் கொடையும் பிறவும் சேர்ந்து நான்கு கோடி ரூபாய் செலவாகிறது, இதில் சுமார் இரண்டு கோடி ரூபாய் ஒரு சமுதாயத்தின் நலத்துக்குப் பயன்படுகிறது. எஞ்சிய தொகை வெளிநாட்டுப் பொருட்கும் பிறருக்கும் செலவாகிறது. கோயிலில் உள்ள ஆண்டவனை வழிபடுதற்கு எல்லார்க்கும் உரிமையுண்டு; எல்லாரும் ஆண்டவள் அருளுக்கு உரியவர் என வழிபாட்டுரிமையை வற்புறுத்தி, வேறுபாடில்லாத வழி பாட்டை உண்டு பண்ணுதற்கு இலக்கியங்கள் துணை செய்ய வில்லை. அரசியலாளர் முற் போந்து சட்டவகையில் பாதுகாப்பளித்த பின்பே வழிபாட்டுரிமை எல்லார்க்கும் வாய்ப்பதாயிற்றென்பது யாவரும் அறிந்தது. திருப்பாணாழ்வார் வரலாறும் திருநீலகண்ட யாழ்ப்பானர் வரலாறும்