பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

செம்மொழிப் புதையல்


செய்வர். மலைநாட்டிலிருந்து குதிரை வாணிகரும் வந்து குதிரை வியாபாரம் செய்தனர். தஞ்சை மாநாட்டு மன்னார்குடிக் கல்வெட்டால் மிளகு வாணிகரும் பிறரும் மலைநாட்டிலிருந்தும் வேறு நாடுகளிலிருந்தும் வந்து போன செய்தி தெரிகிறது. இவர்களிற் பலர் விற்றற்குரிய பொருள்களைப் பெருந் தொகையாகக் கொணர்ந்து ஒரிடத்தே பண்டகசாலை நிறுவி அதன் கண் தொகுத்துச் சிறிது சிறிதாக ஊர்களுக்கு அனுப்பினர். இவர்களைப் போலவே இந் நாட்டு வணிகர்களில் பலர் வெளிநாடுகளிலிருந்து வாணிகப் பொருள்களை வருவிப்பதும், இந் நாட்டுப் பொருள்களை வெளிநாடுகட்குக் கொண்டு செல்வதும் உண்டு.

இவ்வாறு, வணிகரது போக்கு வரவில். இடைச் சுரங்களில் ஆறலைகள்வரது குறும்பும் இருந்து வந்தது. அவற்றினின்றும் தம்மைக் காத்துக் கொள்ள வேண்டிய நிலை இவ்வணிகர்க்கு நேரிட்டது. அவர்களைக் காக்க வேண்டிய கடமை அந் நாளை அரசர்க்குண்டென்பதைச் சங்க நூல்களே கூறுகின்றன. அத்தம் செல்வோர் அலறத் தாக்கிக், கைப் பொருள் வெளவும் கள வ்ேர் வாழ்க்கைக், கொடியோர் இன்றவன் கடியுடை வியன் புலம்’ என்பதனால், வழிப் போக்கர்க்கு ஊறுண்டாகா வண்ணம் பழைய நாளைத் தமிழ் வேந்தர் காவல் புரிந்தமை விளங்குகிறது. என்றாலும், வணிகர் செல்லும்போ தெல்லாம் அரசனது படையைக் கொண்டேகுவது வணிகர்க்குப் பல சமயங்களில் இடுக்கண் விளைத்தது. சில சமயங்களில் அரசியற் படையின் உதவி கிடைப்பது அரிதாகும். அதனால் வணிகர் தாமே படைகளை வைத்தாளும் உரிமை பெற்றுப் படையும் கொண்டிருந்தனர். இம் முறை அந் நாளில் மேனாடுகளிலும் இருந்தது. ஐரோப்பியர் நம் நாட்டில் வாணிகம் செய்ய வந்தபோது தமது செலவிலேயே படைகளை வைத்தாண்ட செய்தியை நம் நாட்டுச் சரித்திரமே கூறுகிறதல்லவா? பகை பெரிதானபோதே அரசர் முன் வந்து தாங்கள் பெரும் படை கொண்டு பகைவர் குறும்புகளை அடக்கினர்.

இந் நிலையில் இரட்டபாடி கொண்ட சோழ வள நாட்டில் வணிகர் பலர் வாழ்ந்தனர். அவருள் வெளிநாட்டு வணிகரும் இருந்தனர். அவருள் தெலுங்கு நாட்டினர் பலர். அந் நாட்டில்