பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

செம்மொழிப் புதையல்


என்று பாடிக் காட்டுகின்றார். வேறொருத்தியின் தந்தை முன்பொருகால் நடந்த தும்பைப் போரில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்டான்; அவள் கணவன்.முன்னாள் நடந்த கரந்தைப் போரில் நிரைகாவலில் உயிர் கொடுத்தான். மறுநாள் போர் நிகழ்ச்சி தெரிவிக்கும் பறையோசை கேட்டதும் தன் ஒரு மகனையும் போர்க் கோலம் செய்து வேற்படையைக் கையில் தந்து செருமுகம் செல்க என விடுத்தாள்; இதனை,

“இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிது விரித்துடீஇப்
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமக னல்லது இல்லோள்
செருமுக நோக்கிச் செல்கென விடுமே.”

என்று சான்றோர் எடுத்துரைக்கின்றனர்.

இவ்வாறு தம்முடைய மனைக்கண் உள்ள ஆடவர் போரில் மறம் குன்றாது பொருது புகழ் பெறுதலை விரும்பும் தமிழ்மகளிர் போரிற் புண்பட்டுவரும் வயவர்க்கு மருத்துவம் செய்வதில் மிக்க மாண்புறுகின்றனர். கிழிந்த புண்களைத் தைத்தலும் மருந்திடுதலும் இனிய பண்ணில் இசைபாடுதலும் மருத்துவத் துறையில் கையாளப்படுகின்றன. புண்ணுற்ற மறவர்க்கு மருத்துவம் செய்யப்பெறும் மனைகளைப் பேய் முதலிய தீக்கோள் வந்து தாக்காவண்ணம் மனையிறைப்பில் ஈர இலையும் வேப்பிலையும் செருகப்பட்டிருக்கும். பெரும் புண் உற்றவர் உள்ளம் உலகியல் தொடர்பில் விடுதலை பெற்றுத் துறக்கவின்பத்தில் நாட்டம் கொள்ளுமாறு காஞ்சிப்பாட்டுகள் இனிய முறையில் பாடப்படும்.

போர்த்துறையிலும் பிறவற்றிலும் புகழ்மிக்கு விளங்கிய காதற் கணவன் இறந்துபடின், அவன் பிரிவாற்றாத தமிழ்மகளிர் அவனுடனே உயிர் துறப்பதுண்டு. கணவனோடே தாமும் உயிரிழந்தால் மறுபிறப்பில் அக்கணவனுக்கே மனைவியாய்ப் பிறத்தல் கூடும் என்று பண்டைத் தமிழ்மகளிர் நினைந் தொழுகினர். “இம்மை மாறி மறுமையாயினும், நீயாகியர் எம்கணவனை யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே” என்று மகளிர் கூறுவதாகச் சான்றோர் பாடுவது இதற்கு ஏற்ற சான்றாதல் காண்க. இதனால் இறந்த கணவனை எரிக்கும் ஈமத்தில்