பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

109


6. மையீரோதி மடநல்லீரே

"மையிரோதி மடநல்லிரே, மையிரோதி மடநல்லீரே" என்று மொழிந்து வாய்வெருவும் இம்மட நல்லாள் யாவள்? இவளது மலர்முகம் வாடியுளது; மழைக்கண் நீர் துளிக்கின்றது; வாயிதழ் மெல்ல அசைகின்றது; மெய்யிலும் சிறிது தளர்ச்சி புலனாகின்றது. இவளை உற்று நோக்குவோம். இவளது மனத்தே பெருந்துயர் நின்று அலைக்கின்றது; இவள் அடிக்கடி மருண்டு நோக்குகின்றாள்; ஆம், அவளது உள்ளத்தே அச்சம் பிறந்திருக் கிறது; என்னோ காரணம்?”

இவ்வாறு தம்மனத்தோடு சொல்லாடி வரும் இப்பெரியார் உடையாலும் நடையாலும் சிறந்த சான்றோர் போலத் தோன்றுகிறார். இவர் பின்னே செல்வோம். அதோ தென் மலையின் அடியில் நிற்கும் பாறைமீது ஏறி நிற்கிறார். பகலவனும் உச்சிகடந்து மேலைத்திசையை நோக்குகின்றான். வெயிலின் வெப்பமும் மிகுதியாக இல்லை. காடும் பசுந்தலை பரப்பி வெண் பூ விரிந்து நறுமணம் கமழ்கின்றது. மானினம் புல்மேய்ந்து மகிழ்ச்சி மிகுகின்றன. கிள்ளையும் புறாவும் கூட்டங் கூட்டமாய்ப் பறந்து திரிகின்றன. தினைப்புனங்களிலும் கதிர்கள் பால்கட்டிச் சின்னாளில் முற்றும்பக்குவத்தேயுள்ளன. இதோ, இச்சான்றோர் மலையடியின் மேற்றிசையில் உள்ள தினைப்புனத்தே தம்கட் பார்வையைச் செலுத்தி ஊன்றி நோக்குகின்றார்; ஏன்? நன்று, நன்று. அப்புனத்தருகே நிற்கும் வேங்கை மரத்தின் அடியில் வீற்றிருக்கும் உருவம் யாது? தெய்வமோ? பெண்ணோ? தெரிந்திலதே! ஆம், பெண்ணே: அவள் என்ன செய்கின்றாள்?

இதோ இச்சான்றோரும் அவளிருக்கும் திக்கு நோக்கியே செல்கிறார், இவர் ஏன் அவள் அறியாவண்ணம் புதர்களிடையே